அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனம் சுவெற்றா (Schwerte) நகரில் 25.04.2026 சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வை ஆரம்பித்தது. இந்நிகழ்வில் கலைப்பண்பாட்டுக் கழகத் துணைப் பொறுப்பாளர் கலையரசி பொதுச் சுடரினை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து நடுவர்களாக வருகை தந்த முனைவர் திருமதி. மதிவதனி சுதாகரன், முதுகலைமானி திருமதி. ஞானசுந்தரி வாசன், முதுகலைமானி திருமதி. அனுசா சற்குணநாதன் ஆகியோரும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு, ஊடகத்துறைப் பொறுப்பாளர் கதிர், கலைப்பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கோபி ஆகியோரும் இணைந்து மங்கல விளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.
மேலும் நடராசர் பூசையினை நடன ஆசிரியர்களான திருமதி. அமலா அன்ரனி சுரேஸ்குமார், திருமதி. சாவித்திரி சரவணன், திருமதி. யனுஷா பிரதீப் ஆகியோர் சிறப்புற நடாத்தினர். காலதாமதமின்றி தேர்வுகள் ஆரம்பமாகின. இத்தேர்வில் நிருத்திய நாட்டியாலயம், பாரதி கலைக்கூடம், சத்திய நிருத்திய ஸ்தானா ஆகிய நடனப் பள்ளிகளில் இருந்து வந்து பயின்ற தாரகைகள் பங்குபற்றினர். அனைவரும் தமது முகபாவங்களை மிகவும் அழகாக வெளிப்படுத்தித் திறமையான முறையிலே நடனம் ஆடி பார்வையாளர்களின் வரவேற்பையும் பெற்றனர். நிகழ்வுகள் அனைத்தையும் கலையரசி அவர்கள் மிகவும் அழகாகத் தொகுத்து வழங்கினார். வேறு இனத்து இளையோர் பலரும் பார்வையாளர்களாக வந்தமை குறிப்பிடத்தக்கது.



