கிழக்கு சசெக்ஸில் உள்ள கேம்பர் சாண்ட்ஸ் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கடலில் சிக்கிய பிரிட்டிஷ் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் நேரப்படி இரவு 7:00 மணிக்குச் சற்று முன்னதாக, தண்ணீரில் மூழ்கி உயரிருக்குப் போராடிய மூன்று பேருக்கு உதவுவதற்காக அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டதாக சசெக்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
சுமார் 30 நிமிடங்களுக்குப் பின்னர் 18 வயது இளைஞர் ஒருவர் கடலில் இருந்து மீட்கப்பட்டார். ஆனால் மருத்துவ சிகிற்சை அளித்த போதும் சிறிது நேரத்திலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டவர் 24 வயதுடையவர் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் பின்னர் அவரது வயது 18 எனத் தெளிவுபடுத்தினர். 16 வயது சிறுவன் மற்றும் 24 வயது ஆண் ஆகிய மற்ற இருவரும் பாதுகாப்பாகக் கரைக்குத் திரும்பினர்.
ஒருவருக்கொருவர் அறிமுகமான அந்த மூன்று நபர்களும் லண்டனிலிருந்து கடற்கரைக்கு பயணம் செய்திருந்தனர்.
கடலோரக் காவல்படை, பெட் லெவல் மீட்புப் படகு மற்றும் தென்கிழக்கு கடற்கரை ஆம்புலன்ஸ் சேவை ஆகியவையும் இந்த சம்பவத்திற்கு பதிலளித்தன.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அப்பகுதியில் அவசரகாலப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் சசெக்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த மரணத்தைச் சுற்றி எந்த சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளும் இல்லை என்றும், இது குறித்து மரண விசாரணை அதிகாரி பரிசோதிப்பார் என்றும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.
