செம்மணி புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்டத்தின் 50 நாளில் 304 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
முதலாம் கட்டமான 09 நாட்களும் , இரண்டாம் கட்டமான 45 நாட்களுமான 54 நாட்களில் 240 என்புகூடுகள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் , இன்றைய தினம் புதன்கிழமை 50ஆவது நாளில் 304 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தின் இதுவரையிலான 104 நாட்களில் 544 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
புதைகுழியை அண்மித்த பகுதிகளில் அகழப்பட்ட சோதனைக்குழிகளுக்குள்ளும் என்புகூடுகள் அடையாளம் காணப்பட்டு வருவதனால் , புதைகுழியில் அளவு மேலும் விஸ்தரிக்கப்பட்டவுள்ளது.
இந்நிலையில் மேலும் பல என்புக்கூடுகள் அடையாளம் காணப்படும் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது.
இதனிடையே செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(12) நடைபெற்றபோது 05 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேவேளை அடையாளம் காணப்பட்டதில் 06 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை 544 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 530 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
