சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை (ஆகஸ்ட் 30) முன்னிட்டு, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
நாளை காலை 09:00 மணிக்கு தந்தை செல்வா கலையரங்கத்தில் நிகழ்வு நடைபெறவுள்ளது
மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, யாழ். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுத் தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து ஆரம்பமாகும் கவனயீர்ப்புப் பேரணி தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்து மாநாட்டு அமர்வுகள் தொடங்கும்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நினைவாகக் குடும்பத்தினரால் பாதுகாக்கப்பட்டு வரும் ஆடைகள், கைக்கடிகாரங்கள், அவர்கள் விரும்பிப் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் அடங்கிய உணர்வுபூர்வமான நினைவுப் பொருட்காட்சியும் மாநாட்டு வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வெளிநாட்டுத் தூதரகப் பிரதிநிதிகள், வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள், மனித உரிமை மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
