கனடா, பிரித்தானியா தவிர ஏனைய சர்வதேச தரப்புக்கள் தமிழினப் படுகொலை நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதற்கு தயங்குவதுடன் எங்கெங்கெல்லாம் அதனை தவிர்க்க முடியுமோ தவிர்த்து வருகின்றது என்று தமிழ்த் தேசியப்பேரவையின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பட்டால் செம்மணி உள்ளிட்ட தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரி நேற்று முன்னெடுக்கப்பட்ட பேரணியின் இறுதியில் நல்லூர் கிட்டுபூங்காவில் ‘தமிழ் மக்களின் நீதிக்கான குரல்’ எனும் தொனிப்பொருளில் உள்ளகப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்கின்றோம், சர்வதேச விசாரணையை ஐ.நா.பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பிரகடனக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டம் இனப்படுகொலையுடன் மௌனிக்கப்பட்டது. அன்றிலிருந்து இனப்படுகொலை நடைபெற்றமைக்கான சாட்சியங்களை எத்தனையோ இடங்களில் வெளிப்படுத்தியும் தமிழினப்படுகொலை நடைபெற்றது என்பதை சர்வதேச சமூகம் ஏற்க மறுத்து வருகிறது.
எமது தாயகத்தில் தமிழினத்தை இலக்கு வைத்து கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையொன்று அரங்கேற்ற ஆரம்பித்ததை அடுத்தே ஆயுதப்போராட்டத்துக்கு தள்ளப்பட்டோம். அதன்பின்னர் முள்ளிவாய்க்காலில் அந்த இனப்படுகொலை உச்சமடைந்து தற்போதும் நீடித்துக்கொண்டிருக்கின்றது. இதனை ஆதராங்களுடன் வெளிப்படுத்தியுள்ளபோதம் சர்வதேசம் ஏற்றுக்கொள்வதற்கு தயங்குகின்றது.
