காணாமலாக்கப்பட்டவர்களின் எஞ்சியுள்ள நினைவுப் பொருட்கள் நீதிக்கான போராட்டத்தில் பலமிக்க ஆயுதமாக வெளிப்படுத்தப்பட்டுவிட்டதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச மாநாட்டின் ஊடாகத் தமக்கு இழைக்கப்படும் அநீதியின் உண்மை முகத்தைச் சர்வதேச சமூகத்திற்கு அம்பலப்படுத்தியுள்ளதாக யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இறுதிப் போரின்போதும் அதற்கு முன்னரும் பின்னரும் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும், துணை ஆயுதக் குழுக்களினால் கடத்தப்பட்டும் காணாமலாக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடி 2017 ஆம் ஆண்டு முதல் வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
நீதித்துறையில் தமக்கு நம்பிக்கையில்லை எனவும், சர்வதேச விசாரணையே அவசியம் எனவும் வலியுறுத்திய அவர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்காக அரசினால் அமைக்கப்படும் உள்நாட்டு ஆணைக்குழுக்களும் நிறுவனங்களும் வெறும் ஏமாற்று நாடகங்கள் எனவும், எதிர்காலத்தில் எவருக்கும் இந்நிலை ஏற்படாதவாறு மீளநிகழாமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இராணுவத்தின் அச்சுறுத்தல்கள், தொடர் கண்காணிப்புகள், புலனாய்வு விசாரணைகள், வயது முதிர்வு, நோய் மற்றும் வறுமை போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், இனிவரும் தலைமுறையினர் எவரும் கடத்திக் காணாமலாக்கப்படக் கூடாது என்பதற்கான ஓர் அரணாகவே தெருவில் நின்று போராடுவதாகத் தாய்மார்கள் உருக்கமாகத் தெரிவித்தனர்.
ஒவ்வோர் ஆண்டும் ஓகஸ்ட் 30 சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தில் போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில், இவ்வருடம் போராட்டத்துடன் இணைந்து உலக நாடுகளிடம் தமது எதிர்பார்ப்புகளைப் பிரகடனமாக முன்வைக்கும் சர்வதேச மாநாடு ஒன்றை வெற்றிகரமாக நடாத்தியுள்ளதாகக் குறிப்பிட்டனர்.
மாநாட்டில் பங்கேற்ற சர்வதேசப் பிரதிநிதிகள் தமிழ் தாய்மார்கள் எதிர்நோக்கும் நீதி மறுப்பையும் இன்னல்களையும் ஆழமாகப் புரிந்து கொண்டுள்ளனர் எனவும், தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலேயே உயிரிழந்த பெற்றோரின் நீதிக்கான தேடல் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.இம்மாநாடானது போராட்டக் களத்திலிருந்த சோர்வை நீக்கிப் புதிய புத்துணர்ச்சியையும் உத்வேகத்தையும் அளித்துள்ளதாகவும், சர்வதேச அரங்கில் அநீதிகளை அம்பலப்படுத்தி அடுத்த கட்டப் பயணத்தை நம்பிக்கையுடன் முன்னெடுக்கத் தமிழ் மக்களினதும் சர்வதேசத்தினதும் தார்மீக ஆதரவைத் தொடர்ந்து கோருவதாகவும் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
