அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான விதிமுறைகள் அரசாங்கத்தின் சுற்றுநிருபங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன.
எனவே, இதற்காக தமிழ் மக்களையோ அல்லது தமிழ் அதிகாரிகளையையோ குற்றம்சாட்டுவது தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்துக்கள் பொட்டு அல்லது திருநீறு அணிவதும், பௌத்தர்கள் கையில் பிரித் நூல் அணிவதும் அவர்களின் மத அடையாளங்களுடன் தொடர்புடையவை எனக் குறிப்பிட்ட அவர், அதேபோன்று முஸ்லிம் பெண்கள் தமது மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப ஆடை அணிவதும் மத சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும் எனத் தெரிவித்தார்.
எனவே, அரச ஊழியர்கள் தமது மத அடையாளங்களைப் பேணியவாறு பணியாற்றுவதற்கு ஏற்ற வகையில் அரசாங்கம் தெளிவான சுற்றுநிருபங்களை வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த கால அரசியல் முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் – முஸ்லிம் சமூகங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படக் கூடாது எனவும் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளித்த சிலர், முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்வதற்கு ஆதரவளித்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போது தமிழ் – முஸ்லிம் சமூகங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
தமிழ் பேசும் அரசியல் கட்சிகளுக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும், அவற்றைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொண்டு, எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், கல்முனை மருத்துவமனை தொடர்பான விவகாரத்தில் மருத்துவமனை அதிகாரிகளையும் அப்பகுதி மக்களையும் இனவாதிகளாகச் சித்தரிக்கும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
மதம் மற்றும் இன அடையாளங்கள் தொடர்பான விவகாரங்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தாமல், அனைத்து சமூகங்களினதும் உரிமைகளை மதித்து செயற்படுவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
