காரைதீவு பிரதேச சபையின் 4ஆவது சபையின் 14ஆவது மாதாந்தக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (11.08.2026) காலை 9.30 மணிக்கு காரைதீவு பிரதேச சபை அலுவலக சபா மண்டபத்தில் நடைபெற்றது.
சபைத் தவிசாளர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டதுடன், 13ஆவது மாதாந்த சபைக் கூட்டத்தின் அறிக்கை நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து தவிசாளரின் அறிவிப்புகள் மற்றும் பல்வேறு பிரேரணைகள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, கல்முனை ஆதார வைத்தியசாலையில் அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த விவகாரம் தொடர்பில் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் தனது வருத்தத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். அரச நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் தொடர்பான அரச சேவை விதிமுறைகள், சுற்றுநிருபங்கள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான நீண்டகால நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் பாதிக்கும் வகையில் எந்தவொரு நிர்வாக நடவடிக்கையும் அமையக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய சூழலில், இவ்வாறான சர்ச்சைகள் ஏற்படுவது ஆரோக்கியமானதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தரப்பினர் தமிழ்–முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அரச நிறுவனங்களில் ஏற்படும் சர்ச்சைகள் அத்தகைய நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கக்கூடாது என தவிசாளர் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், முன்னாள் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் மற்றும் சபை உறுப்பினர்களான என்.எம். ரணீஸ், ஏ. பர்ஹான், குமார் உள்ளிட்டோரும் கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் தமது கண்டனத்தையும் கவலையையும் வெளிப்படுத்தினர்.
அரச நிறுவனங்கள் தனிநபர்களின் விருப்பு–வெறுப்புகளின் அடிப்படையில் இயங்கக்கூடாது என்றும், அரச சட்டங்கள், சுற்றுநிருபங்கள், சேவை விதிமுறைகள் மற்றும் நியமன நடைமுறைகள் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அத்துடன், அரச நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் உரிமைகளும் கண்ணியமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், நிர்வாகத் தீர்மானங்கள் சட்டபூர்வமான மற்றும் நியாயமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பது அனைத்து அரச நிறுவனங்களினதும் பொறுப்பு எனக் குறிப்பிட்ட உறுப்பினர்கள், தமிழ்–முஸ்லிம் மக்களிடையே தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளைத் தவிர்த்து, பிரச்சினைகளை கலந்துரையாடல் மற்றும் சட்ட ரீதியான வழிமுறைகள் ஊடாகத் தீர்க்க சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
மேலும், குறித்த வைத்தியசாலை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு, குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் இடமாற்றம் உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகளுடன் சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கம், சம்பந்தப்பட்ட அமைச்சு, திணைக்களம் மற்றும் அதிகாரிகளிடம் சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஏனைய விடயங்களும் ஆராய்வு இதேவேளை, சபைக்குச் சொந்தமான JCB வாகனத்தை ரூ.340,500 மதிப்பீட்டுச் செலவில் திருத்துவதற்கான அனுமதி தொடர்பான பிரேரணையும் ஆராயப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த உறுப்பினர் ஏ. பர்ஹான், பழைய வாகனங்களை தொடர்ச்சியாகத் திருத்துவதற்குப் பதிலாக அரசாங்கம் அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சுகளிடமிருந்து புதிய JCB வாகனத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், சபையின் பதில் செயலாளராகக் கடமையாற்றும் திருமதி வனிதா டேவிட் அமிர்தலிங்கம், அவரது பதில் செயலாளர் சேவைக்காலம் நிறைவடைந்த பின்னரும் தொடர்ந்து அப்பதவியில் கடமையாற்றுவதற்கான அனுமதி தொடர்பில் சபையில் பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.
அத்துடன், டெங்கு ஒழிப்பு, வடிகான் துப்புரவு, மாளிகைக்காடு மையவாடி செயற்றிட்டம் மற்றும் சட்டவிரோத வர்த்தக நிலையங்கள் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றுக்கான பொருத்தமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
காரைதீவு பிரதேச சபையின் இன்றைய கூட்டத்தில் நிர்வாக ஒழுங்கு, அரச விதிமுறைகளைப் பின்பற்றுதல், பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் தமிழ்–முஸ்லிம் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
