ஜெர்மனி ஓபன்பாகுசன் நகரில், தமிழ் ஸ்டார் இசைக்குழுவின் நான்காவது வருட நிகழ்வு மிகவும் சிறப்பாகப் பல கலைஞர்களை இணைத்து, 41 பாடல்கள் திறம்பட்ட இசையிலும், பல நடனங்கள் நமது நடனக் கலைஞர்களின் உருவாக்கத்திலும், இளம் தலைமுறையினர் இணைந்து மேடையைச் சிறப்பாக அலங்கரித்த ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வாக அமைந்திருந்தது சிறப்பைத் தந்தது.
அதுமட்டுமல்லாமல், அந்த மண்டபம் நிறைந்து மேலதிகமாக நின்று மக்கள் பார்த்ததென்பதும், எங்களுடைய கலைக்கும் எங்களுடைய கலைஞர்களுக்கும் ஒரு தனித்துவத்தைக் கொடுப்பதாகப் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
புலம்பெயர் நாட்டில் வந்து எம்மவர் கலைகளை வளர்த்துச் சிறப்பாக இது போன்ற தளங்களை அமைத்து, தமிழ் ஸ்டார் இசைக்குழுவின் இயக்குனர்களில் ஒருவரான எமிலியனாஸ் பட்டு அவர்களும், உதையன் அவர்களும் இணைந்து, இவர்களோடு இணையாகத் திருமதி எமிலியனாஸ் மற்றும் இந்த நிகழ்வை இணைந்து முன்னெடுத்த அனைத்து உறவுகளும் மிகச் சிறப்பாகத் தங்கள் பணியைச் செய்து, ஒழுங்குற நிகழ்வுகளை அமைத்துக் காலக்கணிப்பைச் சிறப்பாகக் கொண்டு நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியது என்பது வாழ்த்துக்குரியது.
நிகழ்வானது மங்கல விளக்கேற்றல், அகவணக்கம், வரவேற்பு நடனம் என ஆரம்பித்து, எமது இளம் கலைஞர்களை ஜெர்மனி கலைஞர்கள் மட்டுமல்லாது கொலோன், இத்தாலி எனப் பல இடங்களிலிருந்து கலைஞர்களை இணைத்து, நல்ல முறையான பயிற்சியோடு நேரடி இசை வழங்கல், அதற்கு ஈடுகொடுத்த பாடகர்கள் எனச் சிறப்பான தாயக சினிமாப் பாடல்கள், நடனங்கள் என அமைந்தது.
இந்தச் சிறப்பான இசை நிகழ்வின் நிறைவாக, விளம்பரதாரர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், இசை மீட்டிய கலைஞர்கள் என அனைவரும் கௌரவிக்கப்பட்டதும் சிறப்பைத் தந்தது. இந்த விழாவானது சிறப்பாக நடைபெற்றதை அங்கு வந்திருந்த பார்வையாளர்களும் வாழ்த்திப் பாராட்டியுள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் இன்னும் பல நடைபெற, அனைவரும் ஒன்றிணைந்து எங்களுடைய கலையையும் கலைவளங்களையும் முன்னெடுக்க இது ஒரு முன்மாதிரியான களமாக அமைந்துள்ளது என்பதையும் சிறப்பாக நாங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், இதில் மீதமுள்ள நிதியைத் தாயக சிறப்புக் குழந்தைகளுக்காக முன்னெடுத்துச் செயற்படும் செயல்பாடு, தமிழ் ஸ்டார் இசைக்குழுவின் மிகவும் பாராட்டுக்குரிய மற்றும் சிறப்புற்ற செயலாகும்.
