தோணிதாட்டமடுவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரின் அத்துமீறல் நடவடிக்கைகள் –
மட்டக்களப்பு – வாகரை | 07.09.2026
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தோணிதாட்டமடு கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்களின் வீடு மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகள் மீது வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகக் கூறப்படும் அத்துமீறல் மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் கோரிக்கை விடுக்கின்றது.
05.09.2026 அன்று மாலை சுமார் 3.00 மணியளவில், பொலன்னறுவை வனஜீவராசிகள் திணைக்களத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தோணிதாட்டமடு கிராமத்திற்குச் சென்று, செல்லத்துரை மயில்வாகணம் என்பவரது வீட்டை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர், அவரது அனுமதியின்றி வீட்டிற்குள் நுழைந்து சோதனை என்ற பெயரில் வீட்டிலிருந்த தளபாடங்கள் மற்றும் உடமைகளை அலங்கோலப்படுத்தி சேதப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட தரப்பு தெரிவிக்கின்றது.
அதே சந்தர்ப்பத்தில், கிராம மக்களின் குடிநீர்த் தேவைக்காக வாகரைப் பிரதேச சபையினால் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் நீர்த்தொட்டியும் சேதப்படுத்தப்பட்டதாகவும், இதன் காரணமாக இரண்டு நாட்களாக கிராம மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதன் பின் அருகிலிருந்த இன்னொருவரது வீட்டிற்கு சென்று அவரது உடமைகள் மற்றும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த கருவாடு என்பனவற்றையும் அள்ளிவீதி சேதப்படு த்திச் சென்றதாக அங்கள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
360 தேன் போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு
இதே தரப்பினர் 18.08.2026 அன்று குறித்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 360 தேன் போத்தல்களை பலவந்தமாக எடுத்துச் சென்றதாக பாதிக்கப்பட்ட தரப்பு குற்றஞ்சாட்டுகின்றது.
குறித்த தேனின் தற்போதைய சந்தை பெறுமதி சுமார் 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அவற்றில் 250 மி.லீ தேன் போத்தல் பொலன்னறுவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். குறித்த வழக்கு மீண்டும் டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாகரை நிர்வாகப் பிரிவிற்குட்பட்ட எல்லைக் கிராமம்
தோணிதாட்டமடு, மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதுடன், நிர்வாக ரீதியாக வாகரைப் பிரதேசத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இக்கிராமத்திற்கு வந்து மேற்கொள்வதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் எந்த நிர்வாக மற்றும் சட்ட அதிகாரத்தின் அடிப்படையில் இடம்பெறுகின்றன என்பது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது.
பழங்குடி மக்களின் பாரம்பரிய வாழ்வாதாரம் பாதிப்பு
தோணிதாட்டமடு கிராமத்தில் வசிக்கும் மக்கள் பாரம்பரியமாகக் காட்டைச் சார்ந்த வாழ்வாதாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காட்டில் தேன் சேகரித்தல், குளங்களில் மீன்பிடித்தல், காட்டில் கிடைக்கும் பழங்களைச் சேகரித்து விற்பனை செய்தல் மற்றும் மழைக்காலங்களில் சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுதல் போன்றவை இவர்களின் தலைமுறை தலைமுறையான வாழ்வாதாரத் தொழில்களாக உள்ளன.
ஆனால், வனஜீவராசிகள் திணைக்களம், வனவளத் திணைக்களம் மற்றும் சிறப்பு அதிரடிப்படை உள்ளிட்ட அரச தரப்பினரால் தாம் அடிக்கடி அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாகவும், தங்களது பாரம்பரிய வாழ்வாதார நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை எனக் கூறி வழக்குகள் தொடரப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான வழக்குகளின் காரணமாக பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களில் தண்டப்பணம் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
2025ஆம் ஆண்டு குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம்
இதற்கு முன்னதாக 25.02.2025 அன்று, வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட மூன்றாம் கட்டை, நான்காம் கட்டை மற்றும் கல்லரிப்புச் சேனை ஆகிய பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 13 குடும்பங்களுக்குச் சொந்தமான குடிசைகள் வனவளத் திணைக்களத்தினரால் தீயிட்டு அழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அத்துடன், குடிசைகளில் இருந்த உணவுப் பொருட்கள் மற்றும் மக்களின் உடமைகள் தீயில் அழிக்கப்பட்டதுடன், சில பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்திருந்தனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும், இதுவரை உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
முறைப்பாட்டைப் பதிவு செய்வதிலும் இழுபறி
இந்நிலையில், 05.09.2026 அன்று தோணிதாட்டமடுவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக இன்று 07.09.2026 காலை பாதிக்கப்பட்ட தரப்பினரும் சில சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் வாகரை பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
அப்போது ஆரம்பத்தில் முறைப்பாட்டை பதிவு செய்ய பொலிஸார் மறுத்ததாகவும், பின்னர் ஏற்பட்ட இழுபறி மற்றும் உயர் மட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னரே முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.
அரசாங்கம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக வாகரைப் பிரதேசத்தில், வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்களங்களுடன் தொடர்புடைய அதிகாரிகளின் நடவடிக்கைகளால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதா? என்பது தொடர்பில் அரசாங்கம் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக,
- தோணிதாட்டமடு மக்களின் பாரம்பரிய வாழ்வாதார உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
- 05.09.2026 அன்று இடம்பெற்றதாகக் கூறப்படும் வீடு மற்றும் குடிநீர் தொட்டி சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
- 18.08.2026 அன்று 360 தேன் போத்தல்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
- 25.02.2025 அன்று மூன்றாம் கட்டை, நான்காம் கட்டை மற்றும் கல்லரிப்புச் சேனை பகுதிகளில் குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- அரச அதிகாரிகளின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மக்களின் முறைப்பாடுகளை பொலிஸார் தாமதமின்றி ஏற்றுக்கொண்டு சட்டத்தின் பிரகாரம் விசாரணை நடத்த வேண்டும்.
- தோணிதாட்டமடு கிராமத்தின் நிர்வாக எல்லை மற்றும் குறித்த அரச நிறுவனங்களின் அதிகார வரம்பு தொடர்பில் தெளிவான விளக்கம் வழங்கப்பட வேண்டும்.
“பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை அவர்களுடன் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம். அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் உரிய முறையில் தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சட்டரீதியான முறையில் நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகள் தொடரும்” என கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ச. சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம்
மட்டக்களப்பு
