பூமிப்பந்தின் விரிப்பில் தெற்காசியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள இலங்கைத் தீவிலே, தமிழர் வாழ்வியலின் அடையாளப் பூர்வீக நிலமாக ‘ஈழம்’ என்று மரபுவழித் தொடரால் அழைக்கப்பெற்ற தமிழீழ தேசத்தினதும், இலக்கிய மரபுகளின் தனிச்சிறப்பியல்பினால்த் துலங்கும் தமிழ் மொழியினதும் மீட்சிக்கும், விடுதலைக்குமாகத் தமிழினமானது தமது ஆத்ம பலத்தின் அத்திவாரத்திலிருந்து ஆன்ம விழிப்போடு, அற்புதமான தியாகங்களால் நிறைந்து, வலிகளையும், வேதனைகளையும் சுமந்து, குருதி பாய்ச்சி, உயிர்க்கொடைகளால் உரமேற்றி, நம்பிக்கை நாணை இறுகப்பற்றிக் கட்டி வளர்க்கப்பட்ட ‘தமிழீழ விடுதலைப் புலிகள் ‘ என்ற சுயத்தை இழக்காத வரலாற்று இயக்கத்தின் கோட்பாட்டு உயிர்ப்பானது, ஐம்பதாவது அகவையேற்றம் பெற்று பொன்விழாப் பூண்டுள்ளது.
வட்டுக்கோட்டைத் தீர்வாகத் தமிழினம் வழங்கியதும், பெற்றதுமான தமிழீழத் தனியரசை நிறுவுதலே தமிழினத்தின் முடிந்த முடிவாகிய ஆணைத் தளத்திலிருந்து, அந்த வெற்றி இலக்கினை நோக்கிய ஆத்மார்த்தமான உழைப்புக்காக அணியமாகிய இளந்தலைமுறையினருக்கு மத்தியிலே, மனித நாகரீகமும், அறச்சீற்றமும் தாங்கி எதிர்பார்க்கும் சுதந்திர உரிமையின் திசைநோக்கி, ஒரு மாணவப் பருவத்தையும், கரைந்துவிடாத திடமான உறுதியையும் கொண்டிருந்த இளைஞனாக, இலட்சியக் குவியலின் மைய உந்துவிசையாகி நகரத் தொடங்கிய கோட்பாட்டு வடிவமே மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய இனத்தின் ஆன்மத் துடிப்பாகும்.
தொன்மையும் செழுமையும் மிக்க எமது முன்னைத்தமிழின் வீரமரபை மீண்டுமாகக் கட்டிவளர்த்து, சொல்லுக்கு முன்னான செயலாக்கி, தமிழரின் எழுச்சியையும் நிமிர்வையும் உறுதிசெய்து, ஒட்டுமொத்த தமிழீழ தேசத்தின் ஆன்ம உயிர்ப்பைத் தட்டியெழுப்பி, வீறுகொண்ட இனத்தின் அடிநாதமாக, அச்சாணியாகத் திகழ்ந்து, மக்களது எழுச்சியையும், மாவீரர்களின் அற்புதமான தியாகங்கையும் வீச்சாகக் கொண்டு, கெரில்லா முறமைகளாலே ஏறிக்கடந்து, எதிரிகளைத் திகைப்பூட்டி, பகைவனிடமே போர்க்கருவிகளைப் பறித்தெடுத்து, மரபுவழிக்கு மாற்றலாகி தரை,கடல்,ஆகாயமென விரிந்தெழுந்த தமிழர் சேனையின் உட்பரிமாணம், தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற மகுடம் தரித்திருந்தது.
தமிழீழ தேசத்தின் வீடுதலைக் கனவைத் தாங்கிய உச்சத் தியாகத்தின் மாண்புகளால்க் கட்டி வளர்க்கப்பட்டுள்ள உயிர்ப்புள்ள வரலாற்றுத் தளத்திலேதான் உலகெங்கிலும் உள்ள தமிழினத்தின் வாழ்வியல்நெறி நிலைத்திருக்கின்றது. இதிலிருந்து தமிழினம் எழுச்சிமிக்க தருணங்கள் நோக்கி முன்னேறச் சிந்திக்கவோ, செயலாற்றவோ திடம்கொள்ள வேண்டுமே தவிர இனி ஒருபோதும் வரலாற்றை யாராலும் அழித்துவிட முடியாது. அரைநூற்றாண்டுகால விடுதலைச் செல்நெறியின் நீட்சியிலே தமிழீழ நிழலரசாகத் திரண்டெழுந்த தமிழர் பலம் நிகழ்த்திய இமாலய சாதனைகள் உலகத்தினைப் புருவமுயர்த்தி ஆச்சரியப்பட வைத்ததோடு, ஒப்பற்ற வியத்தகு உலகத்தரச் சான்றுகளின் பிரதியீடே இன்றைய சமகாலத்தின் நிலைமாறு கால அரசியல்ப் போர்க்களங்களாகவும்,சனநாயக இயங்கியலாகவும் தமிழினத்தை உயிர்ப்பூட்டுகின்றது.
தமிழீழ நிலப்பரபிலிருந்தும், புலம்பெயர்ந்த தேசங்களிலிருந்தும் விடுதலைத் தாகத்தின் ஓர்மத்தால், அறத்தின் வழிநின்று கட்டி வளர்க்கப்பட்ட உலகம் ஏற்கத்தக்க பல மூலச் சான்றுகளை அகற்றிவிட முடியாமலும், அவற்றை ஆதாரமாகக் கொண்டு தமிழர் அரசியல் வாழ்வுரிமைக்கான ஒரு இயல்பு நிலையினை ஏற்படுத்தித் தராமலும், உலக நீதியாளர்கள் தடுமாறுவதையோ அல்லது பாராமுகமாக இருப்பதையோ உணர்கின்றோம். அந்தத் தடுமாற்றக் காலத்தே மேதகுவின் மௌனங்கள் பேசும் உட்பொருளை விளங்கிட முயற்சிப்பதும் தெரிகின்றது. முள்ளிவாய்க்காலிலும், அதற்கு முன்னருமாக தமிழர் வீரத்தின் மீதும், பொருளாதாரத்தின் மீதும், ஒழுக்கத்தின் மீதும், பாதுகாப்பின் மீதும், ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய இனத்தின் மதிப்பார்ந்த பண்பாட்டு வாழ்வியல் மீதும் உலக வல்லாதிக்ப் பேரரசுகளின் துணைகொண்டு, வலிந்து திணிக்கப்பட்ட கொடிய போரின் பயனாக, தமிழரின் இயலாமையிலான அடிமை வாழ்வைத் தாம் ஏற்படுத்தி வைத்திருப்பதாகவே சிங்களப் பேரினவாதிகள் கூக்குரலிட்டுக் கொள்கின்றார்கள். சுயத்தை இழக்காத மக்களாகவே பொருளாதாரத் தடைகளைத் தகர்த்தெறிந்து, உள்ளூர் வளங்களை உச்சமான பயன்பாட்டிலே ஈடுபடுத்தி, ஒவ்வொரு மக்களையும் தன்னார்வமாக உற்பத்தி ஊக்குவிப்பிலே பங்கேற்கச்செய்து, பொருண்மிய உற்பத்திகள் தொடக்கம், படைக்கல உற்பத்திகள் வரை வளர்த்து, புதிய புதிய கண்டுபிடிப்புக்களையும், நுட்பங்களையும் வெளிப்படுத்தி, ஆளணிப் பங்கீடுகளை ஒழுங்கமைத்து எமது மக்களுடைய முயற்சியே பெரும் மூலதனமென நிமிர்ந்துநின்ற வரலாற்றை நிகழ்த்திய அதிசயக் கோட்பாட்டு உருவாக்கங்கள் நிகழ்ந்தேறியதும் வரலாறுதான்.

உலகிலே உரிமைகோரிப் போராடும் எல்லா இனங்களுமே தம்மையறியாமலும், தாமாகவே வேண்டியும் ஏதோவொரு வல்ல நாட்டின் தயவோடுதான் தங்கியிருப்பதனை வழமையாகக் கொண்டு தமக்கான இறைமையினை அடகுவைத்துக் காத்திருக்கின்றனர். தம் சுயமிழந்து போகின்ற இப்பேற்பட்ட பேராபத்திலிருந்து தமிழீத்தை தன் தீர்கதரிசனங்களால் பாதுகாத்து, தனது மக்களையும், தனது தேச வளங்களையும், புலம்பெயர்ந்த தமிழீழ உறவுகளின் பேராதரவையும் துணையாகக் கொண்டு, இலட்சிய உறுதியிலே சோரம் போககமலும், சமரசங்களில்க் கட்டுண்டு போகாமலும், சரணாகதிக்கு இட்டுச் செல்லாமலும், கால மாற்றத்திற்கேற்ப வடிவங்களை வகுத்து ஒரே இலட்சியத்தில் தமிழினத்தை அணியமாக்கிய கோட்பாட்டுரு மேதகுவால் முடிந்ததென்றால் அதுவே உலக வல்லாண்மைகளின் நிர்பந்த மனங்களாகின. தரைப்படையினை உருவாக்கி, ஒவ்வோர் படைக்கூறுகளாகப் பெருக்கி, களமாடும் தந்திரோபாயங்களை, மூலோபாயங்களை வகுத்து, மதிநுட்பமான இராணுவ வெற்றிகளை கண்முன்னே நிகழ்த்தி, எல்லைதகண்டிவரும் எதிரிப்படைகளைத் தடுத்தும், ஊடறுத்தும் விரட்டியடித்து, கடலிலே காவியம் படைத்திடும் கடற்படையாற்றலை நிறுவி அலைமேலே களமாடும் ஆற்றலைப் பெருக்கி, கடற்பிராந்தியங்களை எதிரிகளிடமிருந்து பாதுகாத்து, கடல்வலுச் சமநிலை பேணப்பட்டதோடு, வானேறி விண்ணைச்சாடிய வான்புலிகளின் இறக்கை விரிப்பிலே முகிலைத்துளைத்து எதிரியின் நிலைகளை அழித்துப் பெருமையின் படிகளிலே நிமிர்ந்தபோது பொறாமை கொண்டன நீதிமறைத்த வல்லாண்மைக் கழுகுகள்.
ஆணுக்குப்பெண் சமநிலை, அரசியல் இராசதந்திர சமநிலை, புலனாய்வும் உள்ளக, வெளியகப் பாதுகாப்பும், மனித வள மேம்பாடும் திட்டமிடலும், காவல்த்துறையும் நீதி நிருவாகமும், பொருண்மியமும் புனர்வாழ்வும், தேசவழமைச் சட்டங்கள் உருவாக்கலும் நீதிமன்றங்களின் பயன்பாடும், கலை பண்பாட்டு உருவாக்கங்களும் சமூக ஒழுக்கங்களும், ஊடக மேம்பாடும் செய்தி வீச்சுக்களும், திட்டமிடல்களும் தேச நிர்மாணங்களும், வானிலை அவதானங்களும் கண்காணிப்புக்களும், கல்வித் திட்டமிடல்களும் இளையோர் வழிநடத்தலும், இராசதந்திர தொடர்பாடல்களும் பன்னாடுகளின் உறவுகளும், சுகாதார நடைமுறைகளும் ஆரோக்கிய வாழ்வியலும் இப்படியாக மேலும் பல தூர நோக்கிலான விரிந்து சிறந்த தமிழீழத் தனியரசின் முதற்படியான நிழலரசின் பொற்காலம் பூத்திருந்தது. தேசிய ஆன்ம விழிப்பின் சிறப்பியல்புகளைத் தாங்கிய வரலாற்றுப் பேரியக்கத்தின் அகவை ஐம்பதான திருநாளை வாழ்த்தி, தமிழீழத் தனியரசின் இலக்கு நோக்கி உறுதிகொண்டு உழைப்போமாக.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி
