“போதை தருவது மகிழ்ச்சி அல்ல… மனிதனை இழக்கச் செய்யும் மாயை!”
ஒரு நாள் நான் ஒருவரிடம் கேட்டேன்:
“ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை குடியில் வீணாக்குகிறீர்கள்?”
அவர் சிரித்தபடி சொன்னார்:
“வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். குடிக்காதவன் வாழ்க்கையின் சுவையை அறியாதவன்!”
நான் மீண்டும் கேட்டேன்:
“அப்படியென்றால், நீங்கள் ஏன் குடிக்கிறீர்கள்?”
அவரின் பதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“குடித்தால்தான் பேசுவேன்… குடித்தால்தான் சண்டை போடுவேன்… குடித்தால்தான் தைரியமாக இருப்பேன்… குடித்தால்தான் எல்லாம் செய்வேன்!”
அந்த வார்த்தைகள் என் மனதில் ஒரு பெரிய கேள்வியை எழுப்பின.
மனிதனுக்கு இறைவன் ஆறறிவை அளித்திருக்கிறார். சிந்திக்கவும், உணரவும், சரி–தவறை பிரித்தறியவும், கோபத்தையும் ஆசையையும் கட்டுப்படுத்தவும், குடும்பத்தையும் சமூகத்தையும் பாதுகாக்கவும் அந்த அறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த அறிவை மறைத்துவிட்டு ஒரு மதுப் பாட்டிலே தனது தைரியத்தையும் மகிழ்ச்சியையும் தேடுவது எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டம்!
போதை ஒரு மனிதனை மட்டும் அழிப்பதில்லை. அது ஒரு குடும்பத்தின் அமைதியைப் பறிக்கிறது. பிள்ளைகளின் எதிர்காலத்தை இருளாக்குகிறது. மனைவியின் கண்களில் கண்ணீரை நிரப்புகிறது. பெற்றோரின் நிம்மதியை பறிக்கிறது. சமுதாயத்தில் வன்முறை, வறுமை, குடும்பச் சீரழிவு, விபத்துகள் என எண்ணற்ற துன்பங்களுக்கு வழிவகுக்கிறது.
வேதனைக்குரிய உண்மை என்னவென்றால், குடிப்பழக்கத்தின் தீமைகளை பெரும்பாலானோர் அறிந்தே இருக்கிறார்கள். இருந்தும், “எனக்கு ஒன்றும் ஆகாது” என்ற மாயை அவர்களை விடுவதில்லை. அதுவே போதையின் மிகப் பெரிய வெற்றி; மனிதனின் மிகப் பெரிய தோல்வி.
ஒருவரை பலவந்தமாக மாற்ற முடியாது. மாற்றம் வெளியில் இருந்து வராது; அது உள்ளத்தில் இருந்து பிறக்க வேண்டும். “நான் திருந்த வேண்டும்” என்ற ஒரு சிந்தனை பிறக்கும் நொடியே புதிய வாழ்க்கையின் தொடக்கம்.
சுய அறிவோடும், சுய கட்டுப்பாட்டோடும் வாழ முடியாத மனம்தான் போதையைத் தேடுகிறது. ஆனால் அந்தப் போதை, சிறிது நேர மயக்கத்தைத் தந்து, வாழ்நாள் முழுவதையும் பறித்துச் செல்கிறது.
இன்று ஒரு கேள்வி நம் அனைவரின் மனதிலும் ஒலிக்க வேண்டும்:
போதைக்கு அடிமையான மனிதர்களைக் காப்பாற்றப் போவது யார்?
அரசா? சமூகமா? குடும்பமா?
இல்லை…
முதலில் காப்பாற்ற வேண்டியது அவர்களின் மனசாட்சிதான்.
ஒரு மனிதன் தனது மனசாட்சியின் குரலைக் கேட்கும் நாளில்தான் போதை தோற்கும்; குடும்பம் வெல்லும்; சமூகம் நிமிர்ந்து நிற்கும்.
போதை ஒரு பழக்கம் அல்ல. அது மெதுவாக மனிதனை உயிரோடு புதைக்கும் ஒரு குழி.
அந்தக் குழியில் விழாமல் இருப்போம். விழுந்தவர்களை கைகொடுத்து எழுப்புவோம். ஏனெனில், ஒரு மனிதனின் மீட்பு என்பது ஒரு குடும்பத்தின் மறுபிறப்பும், ஒரு சமூகத்தின் எதிர்காலமும் ஆகும். ஆக்கம்
கலைஞர் குமாரு யோகேஸ்வரன்
