அரச அதிகார நிர்வாக மட்டம் ஒத்துழைக்கவில்லையென்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் யாழ்.மாநகரசபையில் மாநகர முதல்வரே போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில் வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் எந்தவொரு தனிநபரையும், அரசியல் கட்சியையும் அல்லது எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்தையும் இலக்காகக் கொண்டவை அல்ல என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஒப்படைத்துள்ள பொறுப்பையும், நிர்வாகத்தின் மீதான அவர்களது நம்பிக்கையையும் பாதுகாப்பதே தமது நடவடிக்கைகளின் ஒரே நோக்கம் என வலியுறுத்தியுள்ளார்.ஒரு நல்ல நிர்வாகியின் கடமை எப்போதும் பாராட்டைப் பெறுவது அல்ல, மக்களின் நீண்டகால நலனுக்காகத் தேவையானபோது கடினமான முடிவுகளையும் எடுப்பதாகும் எனவும் ஆளுநர்; தெரிவித்துள்ளார்.
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு உள்ளூராட்சி மன்றங்களிடமே இருப்பதாகத் தெரிவித்த ஆளுநர், சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்த வேண்டும் என்றும், அரசியல் அழுத்தங்களுக்கோ தனிப்பட்ட செல்வாக்குகளுக்கோ இடமளிக்காமல் சட்டத்தையே வழிகாட்டியாகக் கொண்டு செயற்படுமாறும் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
