முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீதான கொலை முயற்சி சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தம்பையா பிரகாசன் என்ற சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீடு செய்யவுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை, அவருக்கும் மேலும் இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளைப் பாதிக்கக்கூடும் என சட்டமா அதிபர் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சந்தேகநபருக்கு எதிராக மொத்தம் 230 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் சட்டமா அதிபர் தரப்பு தெரிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, நான்கு சரீரப் பிணைகளுடனும் 200,000 ரூபாய் ரொக்கப் பிணையுடனும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கடந்த 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்ததுடன், 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் 20ஆம் திகதி அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக சட்டமா அதிபர் தரப்பு மேற்கொள்ளவுள்ள மேன்முறையீடு, குறித்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
