அண்மை காலமாக மிகவும் அதிகமான அளவில் இந்தியாவிலிருந்து இசைக் கலைஞர்கள், பாடகர்கள் என பலதரப்பட்டவர்கள் இங்கே வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அவர்களை விமான நிலையத்தில் அமோக வரவேற்பு கொடுத்து வரவேற்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
எமது கனடிய மண்ணில் எத்தனையோ குழந்தைகள் திறமையானவர்களாக இருக்கிறார்கள், எத்தனையோ பாடகர்கள் திறமையானவர்களாக இருக்கிறார்கள், எப்பேர்ப்பட்ட இசைக்கலைஞர்கள் இருக்கிறார்கள் இவர்களுக்கு யார் சந்தர்ப்பம் கொடுப்பது ? அல்லது மேடை கொடுப்பது ?
இங்கே வரும்போது அத்தனை இந்திய கலைஞர்களுக்கும் சம்பளம் பேசப்பட்டு அதனடிப்படையிலேயே அவர்கள் இங்கே வருகின்றார்கள். அந்த கலைஞர்கள் தொழில் அடிப்படையிலேயே கனடா வருகின்றார்கள்.
அப்படி வருபவர்களை நாங்கள் விமானநிலையங்களுக்கு அணியணியாகச் சென்று மாலைப் போட்டு, அவர்களுக்கு பட்டுக்கள் போர்த்தி, சில சமயங்களில் மங்கள வாத்தியங்கள் முழங்கி நாங்கள் விமான நிலையங்களில் அவர்களை வரவேற்கின்றோம். ஆனால், எமது கலைஞர்கள் எத்தனை பேருக்கு இப்படியான வரவேற்புகளை அவர்கள் வழங்குகிறார்கள் என்ற கேள்வியை எமக்குள் நாமே கேட்க வேண்டும். நாங்களேன் இவ்வாறு செய்கிறோம்? எனக்கு பதில் தெரியவில்லை. உங்களுக்கு பதில் தெரிந்தால் கூறுங்கள்.
நாங்கள் இந்த கலாச்சாரத்திலிருந்து எப்போது விடுபடப் போகின்றோம்? எங்களது குழந்தைகளை எப்படி பாதுகாக்கப் போகின்றோம்? எவ்வாறு கனேடிய மண்ணிலிருக்கும் எமது அடுத்த தலைமுறை கலைஞர்களை வளர்க்கப் போகின்றோம்? எவ்வாறு இங்கிருக்கும் கலைஞர்களை ஊக்குவிக்கப் போகின்றோம்?
ஒரு சில கலைஞர்கள் இங்கு அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் கூட பெருமளவிலான கலைஞர்கள் இன்னும் இலை மறை காய்களாகவே இருந்துவருகிறார்கள், அவர்களுக்கான வாய்ப்புகளை, சந்தர்ப்பங்களை எப்போது அளிக்கப் போகின்றோம், எப்படி அவர்களை வளர்த்தெடுக்கப் போகின்றோம்.
