யாழ்ப்பாணம், கந்தர்மடம் அரசடி வீதியைச் சேர்ந்த 19 வயதான திருநாவுக்கரசு வைஷ்ணா என்ற உயர்தர உயிரியல் பிரிவு மாணவன் நேற்றிரவு திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிவந்த வைஷ்ணா, கடந்த 10ஆம் திகதி உயிரியல் பாடத்துக்கான இரண்டாம் நாள் பரீட்சையின் போது திடீரென மயக்கமுற்றார். உடனடியாக பெற்றோர் வரவழைக்கப்பட்டு, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்திய சிகிச்சைகளுக்குப் பின்னர் வீடு திரும்பிய மாணவனுக்கு, மீண்டும் 12ஆம் திகதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மறுபடியும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 16ஆம் திகதி இரவு உணவு அருந்திய பின்னர் மாணவன் வைஷ்ணாவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.
இத் திடீர் மரணம் தொடர்பான விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி வி. அன்ரலா மேற்கொண்டார். பிரேதப் பரிசோதனையின் போது மரணத்திற்கான துல்லியமான காரணம் கண்டறியப்படாததால், மேலதிக பரிசோதனைகளுக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எதிர்காலக் கனவுகளோடு பரீட்சை எழுதிக் கொண்டிருந்த வேளையில் மாணவன் உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினர் மற்றும் சக மாணவர்களிடையே மீளாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
