எத்தனை கதைகள் அலமாரி மூலையில் மடிந்து கிடக்கின்றன?
எத்தனை கனவுகள் அடுப்படிப் புகையோடு மெளனித்து போயின? ![]()
19.09.2026 அன்று Kevelaer நகரில்,
திருமதி கீத்தாராணி பரமானந்தன்
அந்த மௌனத்தை உடைத்தார்.
அவர்களின்
“கலையாத கனவுகள்”
கவிதைத் தொகுப்பும்,
“சொல்லாத கதைகள்”
சிறுகதைத் தொகுப்பும்
சிறப்பாக வெளியிடப்பட்டன.
கனவுகளைக் கவிதைக்குள் வைத்தவர், சொல்லாமல் விட்டவற்றைக் கதைகளுக்குள் சொல்லியிருக்கிறார்.
புலம்பெயர் மண்ணில் ஒரு பெண் தன் குரலைக் காகிதத்தில் இறக்கி வைப்பது சிறிய விடயம் அல்ல.
அவளுடைய நாள் ஒரு பெரிய விருந்துப் பந்தி போன்றது: வேலை, பிள்ளைகள், சமையல், உறவுகள், கடமைகள் என்று எல்லோருக்கும் பரிமாறி முடிக்கும்போது, அவளுக்கென மிஞ்சுவது ஆறிப்போன கொஞ்ச நேரம்தான்.
அதையும் உடல் சோர்வு பாதி தின்றுவிடும். ஆறிப்போன நேரத்தில் கனவு காண முடியுமா, கவிதை எழுத முடியுமா?
ஆனால் கீத்தாராணி அவர்கள் தனது கனவை நனவாகக்கி இலையில் பரிமாறியிருக்கிறார் என்றால், அது சாதனை மட்டுமல்ல, கலகமும் கூட.
ஏனெனில் எழுதுவதே ஒரு போராட்டம்,
அதை பின்பு நூலாக்குவது
அதைவிடப் பெரிய போராட்டம்.
நேரம், பணம், பதிப்பு, வாசகர்கள்…
இப்படிப் பல சவால்கள்.
இதில் கடைசியாகச் சொன்னது எம்மைதான். புத்தக வெளியீட்டில் கைதட்டிவிட்டு, புத்தகத்தை வாங்காமல்
வீடு திரும்புவதும், வாங்கி வந்து வீட்டில் வெறும் அலங்காரப் பொருளாக வைப்பதும் நம்மிடம் நிரந்தரமாகக் குடியேறிவிட்டன.
கடைசியில் புத்தகம் நம்மிடம் ஒரே முடிவைத்தான் சந்திக்கிறது:
“அலமாரியில் ஒரு அழகான மௌனம்!”
அன்று விழாவில் மண்டபம் நிறைந்திருந்தது. ஆனால் நிறைந்த மண்டபத்திலும் சில பெயர்களின் இல்லாமை உரத்துப் பேசியது.
எங்கே மற்ற எழுத்தாளர்கள்?
தங்கள் நூல் வெளியீடு என்றால் முதல் வரிசையில் உட்கார்ந்து இருப்பவர்கள்,
பிறர் நூலுக்கு மட்டும்:
“அன்று வேறு அலுவல்”
என்று காணாமல் போவது ஏன்? “தமிழுக்குச் சேவை” என்று நாள்தோறும் ஒலிபெருக்கியில் முழங்குபவர்கள்,
அன்று அந்த மண்டபத்தின் திசையில் தலைகூடத் திருப்பவில்லையே, ஏன்?
அடுத்தவர் செடிக்குத் தண்ணீர் ஊற்றினால், நம் செடியின் வளர்ச்சி குறைந்துவிடும் என்று பயப்படுகிறார்களா,
அல்லது எல்லோரும் ஒளிவட்டத்தின் நடுவில் நிற்கவே விரும்புகிறார்களா?
ஒவ்வொருவருக்கும் ஒரு பொன்னாடை, ஒரு மாலை, “சிறப்பு விருந்தினர், தலைமை” என்ற ஒரு பெயர்ப்பலகை வேண்டும் போல. எல்லோரும் ஒரே நேரத்தில் ஒளிவட்டத்தில் நிற்க வேண்டுமென்றால், அந்த விளக்கைப் பிடித்துக் கொடுப்பது யார்?
அவர்களின் தமிழ்ப்பற்று ஒரு காகிதப் பூ போன்றது; மேடையை அலங்கரிக்க அழகாக அடுக்கப்படும், ஆனால் அடுத்தவர் தோட்டத்தில் ஒருநாளும் மணக்காது.
சரி, நாம் இப்படித்தான்; மற்றவர்களைக் குறை சொல்வோம், நாம் மட்டும் திருந்த மாட்டோம். இதை எழுதும் நானே அடுத்த விழாவுக்கு “வேறு அலுவல்” சொல்லாமல் வருவேனா என்பது இனிமேல்தான் தெரியும்.
மொத்தத்தில்
நூல் வெளியீட்டு விழா நன்றாக நடைபெற்றது. குடும்பத்தின் பொறுமையும் திருமதி கீத்தாராணி அவர்களின் விடாமுயற்சியும்தான் இதைச் சாத்தியமாக்கின.
அடுத்த நூலுக்கான காத்திருப்பையும்
அவர் இப்போதே வாசகர்களிடம் விதைத்துவிட்டார்; அந்த விதைக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டியது இனி நம் பொறுப்பு.
என்றென்றும் நட்புடன்
