“கந்தசுவாமி கோவில் பக்தர்களின் அன்பளிப்பில் ஒரு இயந்திரமும், கனடாவின் ஸ்கார்புரோவில் உள்ள ‘குவாலிட்டி’ (Quality) பேக்கரியின் உரிமையாளரான திரு. பிரான்சிஸ் அந்தோணிப்பிள்ளை தனது தாயார் பெர்னதேத்தம்மாவின் நினைவாக மற்றுமொரு இயந்திரமும் செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டார்.
நிகழ்வில், உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,
“போரினால் பாதிக்கப்பட்ட எங்கள் மண், இழப்புகளிலிருந்து மெல்ல மெல்ல மீண்டெழுந்து வரும் இந்தச் சூழலில், மக்களின் உயிரைக் காக்கும் இத்தகைய உயரிய உதவி என்பது நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றத்தக்கது. சிறுநீரக நோயாளிகளின் அவசியத் தேவையை உணர்ந்து, வட மாகாண மருத்துவமனைகளின் மேம்பாட்டிற்காக இரத்தச் சுத்திகரிப்பு (Dialysis) இயந்திரங்களை வழங்கி பேராதரவு தந்த செந்தில்குமரன் அவர்களுக்கும், இதற்கு உறுதுணையாக நின்ற அனைவருக்கும் மக்கள் சார்பில் என் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
கனடா கந்தசுவாமி கோவில் பக்தர்களின் அன்பளிப்பில், செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் மூலம் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனை (Kilinochchi DGH), மல்லாவி ஆதார மருத்துவமனை (Mallavi BH) மற்றும் வவுனியா மாவட்ட பொது மருத்துவமனை (Vavuniya DGH) ஆகிய மருத்துவமனைகளுக்கு ஆறு இரத்தச் சுத்திகரிப்பு (Dialysis) இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வின் தொடர்ச்சியாக இந்நிகழ்வு நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி திருமதி தயாளினி மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) கலந்துகொண்டார்.
மேலும், இந்நிகழ்வில் செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் நிறுவனர் செந்தில்குமரன், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலாநிதி சேரலாதன், கரைச்சிப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், பூநகரிப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சிவகுமார் சிறீரஞ்சன், பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சட்டத்தரணி சுப்பிரமணியம் சுரேன், கிளிநொச்சி நகர வர்த்தக சங்கத் தலைவர் இளையதம்பி விஜயசிங்கம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகராலய அரசியல் அலுவலர் சாகித்தியனன், கரைச்சிப் பிரதேச சபையின் உறுப்பினர்களான கௌரவ சிவமோகன், கௌரவ ஆனந்தவடிவேல், கௌரவ எழில்வேந்தன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட வாலிபர் முன்னணித் தலைவர் திரு குணராஜ், மாவட்ட பொது மருத்துவமனையின் வைத்தியர்கள், தாதியர்கள், பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.
