தமிழகத்திலிருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி, மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை சுற்றுலா வழிகாட்டி
வழக்கு விசாரணைகளுக்காக இன்று வியாழக்கிழமை (29) யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் விடுவிப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். அத்துடன், வழக்கினை எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி வரை ஒத்திவைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாசியப்பிட்டி, அம்மன் கோவிலடி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கிருஸ்ணகுமார் (வயது 50) என்பவரே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இருந்து கடந்த ஒக்ரோபர் 26 ஆம் திகதி விமானம் மூலம் நாடு திரும்பிய போதே, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட கிருஸ்ணகுமார் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டு, 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்திருந்தார். தண்டனைக் காலத்தின் பின்னர் திருச்சி சிறப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், அண்மையில் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையிலேயே தாய்நாடு திரும்பியிருந்தார் .
விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியற்துறை பொறுப்பாளர் தமிழ் செல்வனின் சாரதியாக அவர் முன்னதாக பணியாற்றியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
