மட்டக்களப்பு, செட்டிபாளையம் கடற்கரைப் பகுதியில் தமிழ் மீனவர் ஒருவரை முழங்காலில் இருத்தித் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்படை அதிகாரியைக் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது. இதனிடையே சம்பவத்தை மீண்டும் விசாரணை செய்து, சித்திரவதை தடுப்பு தண்டனைச் சட்டத்தின் கீழ் போதிய சாட்சியங்களுடன் புதிய வழக்குத் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
செட்டிபாளையம் கடற்கரையில், கல்லடி கடற்படை முகாமின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் கடந்த 5-ஆம் திகதி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த நந்தீசன் என்பவரை கைது செய்திருந்தனர். அங்கு அவரை சுமார் 2 மணிநேரம் முழங்காலில் இருத்தி அடித்துச் சித்திரவதை செய்ததாகப் பாதிக்கப்பட்ட மீனவர் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டைத் தொடர்ந்து, கடற்படை அதிகாரியைப் புதன்கிழமை கைது செய்து களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். அதன்போது, சாதாரண காயம் விளைவித்தாக வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
பாதிக்கப்பட்டவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். “பாதிக்கப்பட்டவரை முழங்காலில் வைத்து அடித்துச் சித்திரவதை செய்துள்ளமை பாரதூரமான செயலாகும். அதனை சித்திரவதை தடுப்புச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்யாமல், எதிராளிக்குச் சாதகமாகச் சாதாரண பிரிவின் கீழ் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்திருந்தனர்.
அதனையடுத்து கடற்படை அதிகாரியை ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். அதேவேளை சம்பவத்தை மீண்டும் முழுமையாக விசாரணை செய்து, சித்திரவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் புதிய வழக்குத் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு கடும் உத்தரவு பிறப்பித்தார்.