ஊடகவியலாளர்களுக்கு பொன்னாலையில் நினைவேந்தல்
ஊடகவியலாளர்களான சி.செ.ரூபன் மற்றும் ம.ந.கடம்பேசுவரன் ஆகியோரின் நினைவேந்தல் பொன்னாலை கண்ணபிரான் படிப்பகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.
ஊடகவியலாளர் ந.பொன்ராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் படிப்பக செயற்பாட்டாளர்கள், இளைஞர், யுவதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
ஊடகவியலாளர் ரூபனின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தலும் {2010.04.25} ஊடகவியலாளர் பண்டிதர் கடம்பேசுவரன் ஐயாவின் 2 ஆம் ஆண்டு நினைவேந்தலும் {2024.04.16} ஒருசேர முன்னெடுக்கப்பட்டது.
இவர்கள் இருவரும் யாழ்.தினக்குரல் பத்திரிகை அலுவலகத்தில் சம காலத்தில் ஊடகப்பணி ஆற்றியிருந்தனர்.
ஊடகவியலாளர் ரூபன் யுத்த காலத்தில் படையினரதும் ஒட்டுக்குழுக்களினதும் கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் ஊடகப்பணி ஆற்றியிருந்தார்.
அப்போது உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டிருந்த பொன்னாலையில் மக்களை மீளக்குடியேற்ற வேண்டும் என்பதற்காக பொன்னாலை மக்கள் ஒன்றியம் நடத்திய போராட்டங்களுக்கும் பெரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தவர்.
ஊடகவியலாளராக மட்டுமன்றி சிறந்த சமூக செயற்பாட்டாளராகவும் விளங்கினார். தமது ஊரான அராலியின் எழுச்சிக்கு பெரும் பங்காற்றியதுடன் பின்தங்கிய கிராங்களில் கல்விப்பணி உட்பட பல்வேறு உட்கட்டுமான பணிகளையும் ஆற்றினார்.
பல இளம் ஊடகவியலாளர்களை உருவாக்கி ஊடகத்துறைக்கும் பங்காற்றினார்.
அதேபோன்று, பண்டிதர் கடம்பேசுவரன் ஐயாவும் பொன்னாலை கண்ணபிரான் படிப்பகத்தின் சிரேஷ்ட ஆலோசராக இருந்தவர்.
தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் அளப்பெரும் பணியாற்றினார்.
பண்டிதக் கல்வியை பல்கலைக்கழகத்தினுள் புகுத்திய பெருமை இவரையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.