தமிழறிஞரும், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளருமான சாலமன் பாப்பையா இன்று வெள்ளிக்கிழமை (11.09.2026) காலை தனது-90 வயது வயதில் தனது சொந்த மண்ணான மதுரையில் காலமானார்.
இந்த மாதம்-05 ஆம் திகதி சிவகாசியில் நடந்த சன்டிவி சிறப்புப் பட்டிமன்றத்தில் வழமைபோன்று நடுவராகப் பொறுப்பேற்றுச் சிறப்பாக நடத்தினார். கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் காரணமாக ஓய்வெடுத்து வந்த நிலையில் இன்று காலை சாலமன் பாப்பையா வயது மூப்புக் காரணமாக காலமானார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியாக இவர் பணிபுரிந்துள்ளார். 12,000 இற்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களைத் தலைமை தாங்கி நடத்திய சாலமன் பாப்பையா கலகலப்பாகப் பட்டிமன்றங்களை நடத்துவதில் கைதேர்ந்தவர். அன்புத் தாய்மார்களே…. அருமைப் பெரியோர்களோ…. இனிய குழந்தைகளே…. என்று ஆரம்பிக்கும் கணீர் என்ற குரலுக்குச் சொந்தக்காரர். புராணங்கள், இலக்கியங்களைப் பேசிக் கொண்டிருந்த பட்டிமன்றங்களில் எளிய மக்களின் வாழ்க்கையைப் பேச வைத்தவர் சாலமன் பாப்பையா.
சாலமன் பாப்பையா இலக்கியத் திறனாய்வில் வல்லவராக விளங்கியதுடன் பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரையும் எழுதியிருக்கிறார். மதுரைக் கம்பன் கழகம் ஒருங்கிணைக்கும் திங்கள் சொற்பொழிவுகளை ஆண்டுதோறும் தொகுத்து நூலாக வெளியிட்டும் வந்துள்ளார்.
இவர் சங்கர் இயக்கிய முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட மூன்று திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது உட்பட ஏராளமான விருதுகளையும், கெளரவங்களையும் பெற்றுள்ள சாலமன் பாப்பையா தனது பேச்சாற்றலால் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மாத்திரமன்றி ஈழத்தமிழ்மக்கள் நெஞ்சங்களிலும், உலகம் முழுவதும் வாழும் தமிழ்மக்கள் மத்தியிலும் என்றென்றும் அழியாத இடத்தைப் பிடித்தவர் என்றால் அது மிகையில்லை. ஆழ்ந்த அஞ்சலிகள்….
