ஈழத்து நாடக திரைப்படக் கலைத்துறையில் மூத்த கலைஞர் என அவரின் வாழ்க்கையின் இறுதிக்காலங்களில் விளிக்கப்பட்டுவந்தார்.
‘கலைப்பெருமகன்’ ஏ.ரகுநாதன் அவர்கள் நினைவுகள் ஆறாவது ஆண்டை நிறைத்து நிற்கிறது.
ஈழத்தில் கலைவாழ்வைச் சுவாசித்து வாழ்ந்து வந்த ஓர் அரும் பெரும் கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்கள், 05.05.1935ல் மலேசியாவில் பிறந்தவர், 22.04.2020 அன்று, பிரான்ஸ் நாட்டில் காலமானார். கொரோனாவின் கொடும்பிடிக்குள் சிக்கியதால் உயிர்துறந்தார்.
அவர் வாழும் காலத்தில் அவரது கலைச்சிறப்புக்கள் பேசப்பட்டன. அவரோடு கலையுறவாடிய பலர் பல்வேறு படைப்புகளை அவரோடு இணைந்து மேற்கொண்டார்கள். மென்மேலும் பலவற்றைச் செயற்படுத்தத் திட்டமிட்டிருந்தார்கள்.
நோய்வாய்ப்பட்டிருந்த போதிலும் இயலாமையை வெளிப்படுத்தாமல் எப்பொழுதும் கலைத்துறை சார்ந்த விடயங்களைக் கலைஞர்களோடு கலந்துரையாடி மகிழ்ந்தார்.
தொலைபேசியில் யார் அழைத்தாலும் பதிலளிப்பார். வயது வித்தியாசமின்றி யாவருடனும் பேசி மகிழ்வார்.
மனித வாழ்வில் பிறப்பும், இறப்பும் தவிர்க்க முடியாதவை எனிலும் ஓர் கலை ஆளுமை நம்மை விட்டு நிரந்தரமாகப் பிரிந்த பின்னர் தான் அந்த ஆளுமையின் மகிமை தெரிகிறது.
அவர் வாழ்ந்த காலத்தில் அவருடன் இணைந்து மேற்கொண்ட பல விடயங்கள் இப்பொழுது நினைவு மீட்டிப்பார்க்க வைக்கிறது.
ஏறத்தாள எழுபத்தைந்து வருடகால கலை அனுபவம். நூற்றுக்கணக்கான உயிரோட்டமான படைப்புகள். கலைத்துறையில் அவரோடு பணியாற்றிய பல்வேறு துறைகள் சார்ந்த பல நூறு கலைஞர்களுடனான அனுபவங்கள்.
ஈழத்துத்தமிழ் திரைப்படத்துறையை தொழில்நிலைக் கலையாக்க முடியும் என்ற ஆக்கபூர்வமான எண்ணத்தைச் சுமந்து பயணித்த ஒரு மாபெரும் கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்கள்.
மலேசியாவில் இருந்து சிறுவயதிலேயே இலங்கைக்கு வந்திருந்த இவர் யாழ்ப்பாணம் நவாலியில் வாழ்ந்து வந்தார். மானிப்பாய் இந்துக்கல்லூரியில் கல்வி பயின்றார். அங்கேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். மானிப்பாய் இந்துக்கல்லூரியில் இவர் நடித்த முதல் நாடகம் ‘தூக்குமேடை’.
காலப்போக்கில் ‘கலையரசு’ க.சொர்ணலிங்கம் அவர்களின் அரவணைப்பில் நாடகம் தொடர்பான பயிற்சிகளைப் பெற்றுத்தேறியவர் அவரது நாடகங்களில் நடித்துப் பெயர் பெற்றார்.
‘கடமையின் எல்லை’ முழுநீளத்திரைப்படத்தில் முதலில் நடித்தார். ‘நிர்மலா’ முழுநீளத்திரைப்படத்தைத் தயாரித்தார், நடித்தார். இலங்கையில் ‘தெய்வம் தந்த வீடு’ கடைசியாக நாயகனாக நடித்து வெளியிட்டார். சிங்களத் திரைப்படங்களில் பணியாற்றினார். ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தில் ஒரு சிறு பாத்திரமேற்று நடித்தார்.
புலம் பெயர்ந்து பிரான்ஸில் வாழ்ந்த காலத்தில் திரைப்பட முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
பிரான்ஸ் தேசத்தில் ‘பவளவிழா’ கண்ட கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்களிடம் கொடுத்த வாக்குறுதியை அவர் இவ்வுலக வாழ்வை நீத்த பின்னரும் ‘ஓர் ஒப்பனை இல்லாத முகம்’ என அவர் தமிழன் பத்திரிகையில் எழுதிய தொடரை அதே பெயர் தாங்கி நூலாக வெளியிட்டு மூத்த பத்திரிகையாளர் எஸ்.கே.காசிலிங்கம் அவர்கள், கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்களை மாண்பேற்றுள்ளார்.
என்றென்றும் எமது மனங்களில் நிறைந்திருப்பவர் ‘கலைப்பெருமகன்’ ஏ.ரகுநாதன் அவர்கள்.