- சமூக விழுமியங்கள், அறம், கர்மா என்ற விமர்சனங்கள் நியாயமானவை..
- ஆனால், சட்டத்தின் பிடியில் உள்ளவர்களின் உயிருக்கு பாதுகாப்பு யார்?
- பொறுப்புக் கூறப்போவது யார்?
மரண தண்டனை இரண்டு முறை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஒரு கைதி தற்கொலை செய்து கொண்டால், அது தொடர்பாக எவரும் வருந்தப் போவதில்லை.
மாறாக கைதியின் நெருங்கிய உறவினர்களுக்கு அது கவலையோடு கலந்த அவமானமாக இருக்கும்.
18 வயது பெண்ணை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் தற்கொலை செய்கிறார் என்றால், ‘சிறைச் சட்டங்கள்’ அல்லது ‘கைதிகளுக்கான பாதுகாப்பு விதிகள்’ என்பதைக் கடந்து, சமூக விழுமியங்கள், அறம், கர்மா என்ற நோக்கில் அந்த தற்கொலையைப் பலரும் விமர்சிப்பார்கள்.
அத்தகைய விமர்சனங்களில் மிக ஆழமான நியாயம் உண்டு.
ஆனால், மரண தண்டனைக் கைதியாக இருந்தாலும் அவருக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் வரை அல்லது சிறைக்குள் அவரது ஆயுட்காலம் முடியும் வரை, கைதிக்குரிய சட்டப் பாதுகாப்பை வழங்க வேண்டியது வேண்டியது ஓர் இறைமை உள்ள அரசின் பொறுப்பு..
அரசியல் தலைவர்கள் சிலரின் பின்னணிகள், மக்கள் பிரதிநிதிகள் சிலரின் செல்வாக்கு அல்லது ஒரு கைதியைப் பராமரிக்கும் முறைமை போன்றவை, அரச நிர்வாக மட்டத்தில் இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் ஏற்பட காரண – காரியம் ஆகின்றன..
குறிப்பாக, பொலிஸார் – சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையில் மரணதண்டனைக் கைதி ஒருவர் இருக்கும் போது, அவரது உயிருக்கு முழுப் பாதுகாப்பு உண்டு என்பது தானே பொருள்???
கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறைச்சாலை ஆய்வு அறிக்கையின் பிரகாரம், சிறைகளில் உள்ள சிறிய அறைகளுக்குள், பல மடங்கு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மரண தண்டனைக் கைதிகள் ஒரு நாளைக்கு 23 மணித்தியாலங்கள் மிகக் குறுகிய அறைகளில் அடைக்கப்படுவதால், அவர்களின் அடிப்படை வாழ்வுரிமை மீறப்படுவதாகவும், அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மருத்துவ மற்றும் உளவியல் கண்காணிப்பு அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, சிறைகளில் தொடரும் மர்ம மரணங்களைத் தடுப்பதற்காக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் மா அதிபருக்கு விசேட வழிகாட்டுதல் ஒன்றை, (Guidelines on Preventing Custodial Deaths) உத்தியோகபூர்வமாகக் கடந்த ஆண்டு வழங்கியிருந்தது.
ஆனாலும், அந்த நடைமுறை பின்பற்றப்பட்டதா என்பது இங்கே கேள்வியாகும்.
ஆகவே, ”மாற்றம்”, ”முறைமை மாற்றம்” என்று மார்தட்டிக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜே.வி.பி.யை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இக் கைதியின் மரணத்தை நியாயப்படுத்தப் போகிறதா அல்லது கைதிகளுக்கான, அதுவும் மரண தண்டனைக் கைதிகளின் பாதுகாப்பு போதியதாக இல்லை என்பதை ஒப்புக்கொள்ளப் போகிறதா?
அல்லது வழமைபோன்று, முன்னைய அரசாங்கங்கள் மீது பழியைச் சுமத்தப் போகிறதா?
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) தனது அறிக்கைகளில், இலங்கையில் சிறைச்சாலை மரணங்கள் – சித்திரவதைகள் இன்னும் ஒரு தொடர்ச்சியான – முறையான பிரச்சினையாக நீடிப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி ஒருவரும், இலங்கை மத்திய வங்கியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணைய வழி நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய அதிகாரி ஒருவரும் தற்கொலை செய்துள்ளனர்.
இந்த இரு பிரதான நிதி மோசடி வழக்குகளின் முதன்மைச் சாட்சிகள் – சந்தேகநபர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டமை, இலங்கையின் உயர்மட்ட ஊழல் விசாரணைகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (Transparency International Sri Lanka -TISL) அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-
