கொழும்பில் இருந்து வெளிவரும்
வீரகேசரி வாரவெளியீட்டில் 14.06.2026இல் பதிவாகி வெளிவந்திருப்பது………
சிறுகதை,கவிதை,நூலுரை,
பத்திரிகை,வானொலி என தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தி் வருபவரும்….
தமிழ் இலக்கிய உலகிற்கு ஏழு நூல்களை படைத்தவரும்….
நற் சேவையாளரும் யாழ் மண்ணை பிறப்பிடமாகவும்,சுவிற்சர்லாந்தை வாழ்விடமாகவும் கொண்ட மூத்த எழுத்தாளர், மண்வாசனைக் கவிஞர்
திரு.விக்கி நவரட்ணம் அவர்களின் பார்வை…..
அன்பும்,நன்றியும்
திரு.ச.சிறிகஜன் அவர்கள்,
பிரதம ஆசிரியர்,
வீரகேசரி,
மற்றும் இணை ஆசிரியர்கள்,
நிர்வாகக் குழுமத்தினர்க்கு.
யாழ்.உரும்பையூர் து.திலக்(கிரி)
சுவிற்சர்லாந்திலிருந்து எழுதும்…
வாரம் ஒரு படைப்பாளி…
***************************
(பார்வை – 99)
காலத்தின் வலி சுமந்த ஈழத்து எழுத்தாளுமைகள் கடல் கடந்து தூர தேசங்களில் வாழ்ந்தாலும் தாம் பிறந்து வளர்ந்து பசுமையாய்த் திரிந்த காலங்களையும் பண்பியல்சார் உறவு நிலைகளையும் பாரம்பரிய கலாசார முறைகளையும் தாங்கி இலக்கியப் பேருலகில் பயணிக்கும் கலை இலக்கியப் பேராளர்களுள் ஒருவராய் ஏழு நூல்களை இலக்கியப் பரப்பிற்கு படைத்த சுவிற்சர்லாந்து வாழ் எழுத்தாளரும், மண்வாசனைக் கவிஞருமான விக்கி நவரட்ணம் அவர்களின் பார்வையோடு இவ்வாரம் இணைவோம்….
தாய்த் திருநாட்டின் யாழ்ப்பாண மாவட்டம் வண்ணார்பண்ணை எனும் எழில் சூழ் கிராமத்தில் திரு.திருமதி.நவரட்ணம் இராசமணி இணையருக்கு 07.04.1949 அன்று மகனாகப் பிறந்தார் விக்னேஸ்வரமூர்த்தி. மெல்லிய உடல்வாகும் சிறுபராய எழிலும் ஒன்றாய்ச் சேர்ந்து குடும்பத்தின் மகிழ்வில் திளைத்திருந்த இவருக்கு கல்விக்கான வயது பாதையைக் காட்டி நிற்க தன் ஆரம்பக் கல்வியை செட்டித்தெரு மெதடிஸ்த மிசன் பாடசாலையில் கற்றார். இளமைத் துடிப்பும் கல்விமீதான விடா முயற்சியும் இடைநிலைக் கல்வியில் நல்ல தேர்ச்சியைப் பெற்றுக் கொடுக்க உயர் கல்விக்காய் யாழ் மத்திய கல்லூரியில் தடம் பதிக்கலானார்.
“இளமையிற் கல்வி சிலையில் எழுத்து”
என்பது போல கல்விக் காலங்களில் வாசிப்பு முறையின்பால் கவனத்தைச் செலுத்திய இவர் யாழ் பொது நூலகத்தில் தனது வாசிப்பு பழக்கத்தை அடித்தளமாய் இட பள்ளிக் காலங்களிலேயே கவிதை, கதை எழுதுதல், மேடைப் பேச்சு என்பவற்றில் களம் அமைத்துக் கொண்டார்.
கல்லூரி வாழ்க்கையை நிறைவு செய்த பின்னர் கொழும்பு தனியார் துறை ஒன்றில் கடமையாற்றினார். பின்னர் யாழ் மாநகர சபையின் பணி நிலைகளோடு இளமையின் கனவையும் சுமந்து பயணித்த இவர் நாட்டின் அசாதாரண சூழ்நிலையினால் 1984ஆம் ஆண்டு தாய் மண்ணை விட்டு சுவிற்சர்லாந்து நாட்டை வந்தடைந்தார். தாய்மண்ணின் பிரிவுத் துயர், குடும்பங்களின் பாசப் பிணைப்பு எல்லாவற்றினதும் பற்றறுந்து உயரப் பறக்கத் துடித்த பறவையொன்று சிறகுடைந்து நொருங்கிக் கிடப்பது போல்.. வாழவந்த தேசத்தில் வலி அழுத்த புதியதொரு தேசத்தில் புரியாத மொழி, கண்டுணராத கலாசாரம் அத்தனைக்குள்ளும் கவலைகளை தூர விரட்டி பிரிவுத் துன்பங்கள் பஞ்சாய்ப் பறக்க ஆழ் மனதிலிருந்து மேலெழுகிறது தாய் மொழி எனும் பேராயுதம்.
கவலைகளின் போதுதான் பலருக்கு கவிதை பிறக்கும். ஆனால் இவருக்கு குடும்பம் சூழ் மகிழ்வுக் காலத்திலேயே கவிதை ஊற்றெடுக்க ஆரம்பித்தது. அதன் பெரும் பாய்ச்சலாய் சுவிற்சர்லாந்திலிருந்தவாறு திரு.தம்பிப்பிள்ளை நமசிவாயம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு சுவிஸ் மண்ணில் வெளிவந்த “ உதயதாரகை” பத்திரிகையில் “நிலவே என்னிடம் நெருங்காதே” என்ற இவரது முதலாவது சிறுகதை வெளிவந்து. இவரது மனத்திரையிலிருந்த சோகங்களை விலக்கி எழுத்துத் துறைக்கு சிந்தனையை திசை திருப்பியது அத்தருணம்..
அதனைத் தொடர்ந்து பிரான்சிலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் கனதி மிகுந்த வாழ்வியல் முறைகளை சிறுகதைகளாக பதிவு செய்து நின்றதோடு பிரித்தானியா தமிழ் உலகம் சஞ்சிகை, காற்று வெளி, வீரகேசரி, தமிழ்நாடு இனிய நந்தவனம், இணையவழி இதழ்கள் என தன் ஆழ்மன உணர்வுகளை வெளிப்படுத்தி நின்ற மூத்த எழுத்தாளர் விக்கி நவரட்ணம் அவர்கள் சுவிற்சர்லாந்து நாட்டை தளமாகக் கொண்டு வெளிவந்த “நிலவரம்” பத்தரிகையில் சிறுகதைகள், கவிதைகள் என்பவற்றோடு அப் பத்திரிகையின் பொதிகை பக்கத்தின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
காலங்கள் நகர்ந்தோட இலக்கியப் படைப்புகளுக்கான களங்கள் விரிகிறது. பிரான்ஸ் ஏ.பி.சி வானொலியில் கவிதை, இசையும் கதையும் நிகழ்வுகளுக்கு படைப்புகளைப் பகிர்ந்து நின்ற இவர் ரி.ஆர்.ரி வானொலி, பிரித்தானியா ஐ.பி.சி வானொலி, ஜீ.ரீ.வி.சி வானொலி, ஐ.எல்.சி வானொலி போன்ற வானொலிகளில் இலக்கியப் பூக்கள் பகுதியில் தன் உணர்வுகளோடு சங்கமித்த இவர் இதர களமாக பட்டிமன்றம், நாடகம் ஆகியவற்றை எழுதி வாழும் மாநில விழாக்களில் நடித்திருந்த நினைவுகளையும் பகிர்ந்து நிற்கிறார்.
கனதியான வாழ்க்கை முறை அதற்குள்ளும் தாய் மொழி மீதான அதி உச்ச ஈடுபாடு நேர்த்தியான எழுத்து நடை காலத்தைக் குறித்து நிற்கும் கருப் பொருள் என தன் படைப்பலகுகளில் சமூகத்திற்கான நேர்த்தியான சிந்தனைகளை படைத்து நிற்கும் மூத்த எழுத்தாளர், மண்வாசனைக் கவிஞர் விக்கி நவரட்ணம் அவர்கள் ஈழத்தின் போருக்கு முன்னரான போருக்குப் பின்னரான இலக்கியக் களங்களில் தளம்பலின்றிப் பயணிக்கும் சொற்செறிவு கொண்ட குறிப்பிட்டுச் சொல்லத்தகும் எழுத்தாளர் ஆவார்.
2005இல் பிரான்ஸில் வெளியீடு செய்யப்பட்ட “காலங்கள் வாழ்த்தும்” முன்னூறு ஈழத்துக் கலைஞர் என்ற ஆவணத் தொகுப்பில் இவரைப் பற்றிய விபரத் திரட்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து முல்லை அமுதன் வெளியிட்ட “நானூறு எழுத்தாளர்கள்” என்ற ஆவணத் திரட்டில் இவரது விபரக் கிடக்கைகள் பதிப்பேற்றம் செய்யப்பட்டது.
உலக நாடுகளைச் சேர்ந்த 26 தமிழ் எழுத்தாளர்கள் எழுதி 2021இல் பிரித்தானியாவில் வெளியிடப்பட்ட “விழுதல் என்பது எழுகையே” என்ற தொடர் நவீனத்தில் இவரது கரமும் சேர்ந்து வலுச்சேர்த்தது.
தாயகத்தில் செல்லமுத்து வெளியீட்டகம் வெளியீடு செய்த “1000 கவிஞர்கள் கவிதைகள்” நூலில் இவரது கவிதையும் பதிப்பாக்கம் பெற்றுள்ளது.
சுவிற்சர்லாந்திலிருந்து வெளிவந்த 12 தமிழ் எழுத்தாளர்களின் ஆவணத்திரட்டுத் தொகுப்பில் இவரது விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதோடு அந்நூலில் இவரது சிறுகதையும் பதிப்பாக்கப்பட்டுள்ளது.
07.06.2026இல் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஒழுங்கமைத்த ‘கதைக்களம்’ நிகழ்ச்சியில் விக்கி நவரட்ணம் அவர்களின் “தூரத்து விண்மீனைக் கண்டேன்” சிறுகதை தொகுப்பிலிருந்து ‘அவனா? இவள்’ சிறுகதை குறித்து உரையாடப்பட்டது இவ் ஏற்பாட்டை வள்ளுவர்புரம் படைப்பாளி யோ.புரட்சி முன்மொழிந்தார்….
ஈழத்து எழுத்துலக வரலாற்றில் தனக்கான தனித்துவ இடத்தை நிலைநிறுத்திப் பயணித்து வரும் பும்பெயர்ந்தாலும் தாய் நிலத்தின் வாசனை மறவாத மூத்த எழுத்தாளர், மண்வாசனைக் கவிஞர் விக்கி நவரட்ணம் அவர்கள் வீரகேசரி வாரவெளியீட்டில் எழுதி வெளிவந்த சிறுகதைகளை தொகுப்பு நூலாகப் படைத்ததோடு மேலும் பல படைப்புகளை காலத்தின் கனதி அறிந்து இலக்கியப் பெருவெளியில் விதைத்து அவை விருட்சமாக கிளைபரப்பி நிழல் கொடுத்து நிற்பதையும் வாழ்நிலைக் காலத்தில் கண்டுணர்ந்து பயணிக்கும் ஓர் எழுத்தாளராய் வலம் வரும் மண்வாசனைக் கவிஞர் விக்கி நவரட்ணம் அவர்கள்.
இவர் படைத்த படைப்புகளாவன…
* ஆகாய கங்கை – கவிதைத் தொகுப்பு – 2002
* கண்களில் ஏன் கங்கை – சிறுகதைத் தொகுப்பு – 2011 ( 25.09.2011 பிரான்சில் நடைபெற்ற உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க 11ஆவது மகாநாட்டில் வெளியிடப்பட்டது)
* என் வாசல் வந்த கங்கை – சிறுகதைத் தொகுப்பு – 2022
* மனதில் உறங்கும் மௌனம் – கவிதைத் தொகுப்பு – 2022
* தூரத்து விண்மீனைக் கண்டேன் – சிறுகதைத் தொகுப்பு – 2025
* விழிகளில் ஒரு வானவில் – கவிதைத் தொகுப்பு – 2025
இவற்றோடு சுவிற்சர்லாந்து வலே மாநில சிவன் திருக்கோவிலுக்கான “சிவமர்த்தினி” மலர் தொகுப்புப் பணியையும் ஆற்றி பெரும் பங்காற்றி நின்றார்.
தாயக தேசத்தின் வலி சுமந்த வாழ்வியல் முறைகளை அம் மக்களின் பொருளாதார நெருக்கடிகளை கண்டும் கேட்டும் உணர்ந்த இவர் தனது படைப்புகளின் வெளியீடுகளில் கிடைக்கின்ற நன்கொடைகளை தாயகத்தின் பொதுப் பணிகளுக்காய் வழங்குவதாய் பதிவு செய்கிறார். இவர் எழுத்தாளர் என்பதால் எழுத்துக்களோடு மட்டும் நின்றுவிடாது அவ் எழுத்துகளின் உயிரோட்டமாக தாயகத்தின் இயல்பு நிலையைப் பாதிக்கும் இயற்றை அர்த்தங்களின் போதும் தன் உதவிக் கரத்தை நீட்டுகிறார்…
கிளிநொச்சியைச் சேர்ந்த மருத்துவபீட மாணவன் ஒருவரின் கற்றல் தேவைக்கான மாதாந்த நிதியை வழங்கும் கைங்கரியத்தை தன் ஆத்ம திருப்தியாக உணர்வதாக குறிப்பிடும் விக்கி நவரட்ணம் தன் இலக்கியப் பயணத்தின் உயிரோட்ட நாமமாக தான் ஆழமாய் நேசிக்கும் தந்தையின் பெயரையே குறித்து நிற்கிறார்.
ஊரையும் ஊர் நிலைகளையும் வாழ்ந்து பேணிய பண்பாடுகளையும் தன் எழுத்தின் கரு நிலையாய்க் கொண்டிருக்கும் இவரது 2002ஆம் ஆண்டு வெளிவந்த கவிதைத் தொகுப்பின் சமர்ப்பணத்தினை தன் நேசத் தந்தைக்காய் இப்படிப் பதிகிறார்.
நெஞ்சிலே சுமந்து வளர்த்தவரே
பிஞ்சு வயதிலே அள்ளி அணைத்தன்று
ஆசானை அறிமுகப்படுத்தியெமக்கு
நல்லுரைகள் நாளும் நவின்றெமக்கு
நல்வழி காட்டிய பாசத் தந்தையே
கற்றதனால் ஆன பயனடைந்தோம்
மீண்டுமொருமுறை பார்ப்போமா உங்களை
எங்கள் நேசத் தந்தை
ஆறுமுகம்.நவரட்ணம்
அவர்களுக்கு
விக்கி நவரட்ணம்
இவ்வாறாக தன் தந்தைக்கு நூலை சமர்ப்பணம் செய்த நூலாசிரியர் “யாருக்கு யார் அடிமை” எனும் தலைப்பில் தொடங்கி “சிறகடித்துப் பறந்த பசுமையான நினைவுகள் “ எனும் தலைப்பு வரை அழகு மொழி நடையில் கவி வார்த்துள்ளார். இந் நூலில் முன்னுரையை முகத்தார் எஸ்.ஜேசுரட்ணம், அணிந்துரையை அப்புக்குட்டி ரி.இராஜகோபால், உறவுரை வண்ணைத் தெய்வம் நட்புரையை நாடகக் கலைஞன் கப்ரின் என்.அருணகிரிநாதர் ஆகியோர் வழங்க பின்னட்டைக் குறிப்பை கல்லாறு சதீஸ் வழங்கியுள்ளார். இந்நூலில் உணர்வு நிலைகள் அகலக் கிளை பரப்பி நிற்கிறது. அவற்றுள் “இறந்தும் இறவாப் புகழ் தாங்கும் எங்கள் மாவீரர்கள்” என்ற தலைப்பில்
வீட்டை அழித்தே, நாட்டை அழித்தே,
காட்டையும் அழித்தே வெறும் திடலாக்கினர்?
வீரவேங்கைகளே உங்களை அழித்திவர்கள் கண்டதென்ன?
மீண்டும், மீண்டும், நீங்கள் ஜனனம்!
நிலமதிர உயிரிழந்தும், அழிவுற்று அழுது புலம்பிய மனிதத்தின்
உணர்வுகளைச் சுமந்து நிற்கும்
மனிதக் குடைகளே, காலங்கள் மாறலாம், கோலங்கள் மாறலாம்,
விடியலின் விளிம்பில் நிற்கும்
எங்களுக்கு நீங்கள் வரலாற்றுக் கோலங்கள் – அவை
அழிக்கப்பட முடியாதவை…
அழிக்கப்பட முடியாதவை எனத் தொடரும் இவரது நீள் உணர்வலைகளில் தீராத தாகம் தொக்கி திற்கிறது. இவ் உணர்வுக் கவித் தொடரின் முடிப்பில்
வானத்துப் பூக்கள் விழி பூர்த்து நிற்க
கார்த்திகை 27இல் ஆயிரம் கோடி
கைகளில் ஏந்திய விளக்குடன்
நெஞ்சத்து சோகங்கள் விம்மிவிழ ஓடையென
வளிகின்ற விழிநீருடன் நாம் செலுத்துகின்ற
அஞ்சலிக் கோலங்கள்
உங்கள் வரலாற்றுக்
கல்லறைகளை பூஜிக்கின்றன.
மெய்யுருக ஈழத் திருநாட்டின் அவல நிலையகற்ற வித்தான வீர தீரர்களை தன் ஆழ்மன உணர்வுகளால் கவித்தடமாய் பதிவு செய்து நிற்கிறார் எழுத்தாளர், மண்வாசனைக் கவிஞர் விக்கி நவரட்ணம்.
இவர் ஆழ்மன உணர்வுகளை வரியாக்கிய அத்தனை படைப்புகளும் வாசகர்களின் மனங்களில் உணர்வு நிலையையும் பசுமையான நினைவுகளையும் மறக்க முடியாத தருணங்களையும் நினைவில் கொண்டு வருகின்றதென்பது நிருபணமாகி நிற்கின்றது.
இவரது படைப்புகளுக்கு கிடைத்த போட்டிநிலைப் பரிசில்கள்
* சுவிஸ் தமிழர் கலாசார ஒன்றியம் – சிறுகதை – முதலாம் பரிசு – 1994
* சுவிஸ் தமிழர் கலாசார ஒன்றியம் – கவிதை – இரண்டாம் பரிசு – 1995
* சுவிஸ் தமிழர் கலாசார ஒன்றியம் – கவிதை – இரண்டாம் பரிசு – 1996
விருதுகள்
* இலக்கியப் பணிக்கான விருது – பிரான்ஸ் எவ்றி கலாசார மன்றம் – 2008
* மண்வாசனைக் கவிஞர் – பிரான்ஸ் ஐரோப்பிய தமிழ் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் – 2014
* “நற்பண்பாளர் விருது”
பேர்ன் பொன். முருகவேள் அவர்களின் மணிவிழா நிகழ்வில்-2023
* இலக்கியத் துறைக்கான சிறந்த ஆளுமை விருது – சுவிஸ் ஐரோப்பிய தமிழர் மதிப்பளிப்புக் கழகம் – 2024
எழுத்தாளர் மண்வாசனைக் கவிஞர் விக்கி நவரட்ணம் அவர்கள் சுவிற்சர்லாந்தில் வசித்தாலும் மண்மீது கொண்ட பற்றினால்
“பிரஜா சக்தி சமூக அபிவிருத்தி” ஆலோசகராக
J/99 நல்லூர் வண்ணார்பண்ணை
ஆனைக்கோட்டை பகுதியின் ஒருங்கிணைப்போடு இணைந்து பயணிக்கிறார்…..
எழுத்தாளர் விக்கி நவரட்ணம் அவர்கள் எதிர்காலத்தில் இன்னும் பல படைப்புகளை இலக்கியப் பெரு வெளிக்கு படைத்தருள வேண்டுமென்றும் சமூகப் பணிகளில் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் இலக்கியப் பேராளர்கள், படைப்பாளர்கள் கலை இலக்கிய ஆர்வலர்கள் சார்பாக நாமும் வேண்டி நிற்கின்றோம்.
து.திலக்(கிரி),
