கடந்த கால யுத்தத்தின் போது, இலங்கையிலிருந்து வெளியேறி, இந்தியாவில் அகதிகள் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டுள்ளவர்கள், தமது இலங்கை அடையாளத்தை உறுதிப்படுத்துவதுடன் சுயமாக மீண்டும் திரும்பும்போது அவர்களுக்குக் குடிவரவு ஒப்புதல் அனுமதி வசதிகளை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் போது நாட்டில் நிலவிய உறுதியற்ற சூழல் காரணமாக, அங்கீகரிக்கப்பட்ட இறங்கு துறைமுகத்தின் ஊடாகவோ அல்லது முறையான கடவுச்சீட்டைப் பயன்படுத்தாமலோ இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து சென்று, பின்னர் இந்திய அரசாங்கத்தால் அகதிகளாகப் பதிவு செய்யப்பட்டவர்கள், ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தின் மூலம் சுயமாகஇலங்கைக்கு மீண்டும் திரும்புவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அவர்கள் எமது நாட்டுக்கு மீண்டும் வருகை தருவதற்குத் தேவையான குடிவரவு ஒப்புதல் அனுமதி வசதிகள் தொடர்பாகச் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது.
2006 இற்கு முன்னர், அங்கீகரிக்கப்பட்ட இறங்குதுறை மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டைப் பயன்படுத்தாமல் நாட்டிலிருந்து வெளியேறி, இந்தியாவில் இடம்பெயர்ந்தவர்களில், அந்நாட்டின் இலங்கை வெளிநாட்டுத் தூதரகத்தின் மூலம் தமது இலங்கையர் எனும் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்டவர்கள் தொடர்பாக அரச புலனாய்வு சேவையிடமிருந்து ஒப்புதல் அனுமதி அறிக்கையைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் கொலை, அரசுக்கு எதிரான துரோகம் மற்றும் சட்டத்தின் விசேட ஏற்பாடுகள் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளவாறான அல்லது விதிக்கப்பட்டுள்ள குற்றங்களை மேற்கொள்ளாத ஆள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவுள்ளதாகவம் அறிவிக்கப்பட்டுள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.
