சிரியாவின் உள்நாட்டுப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட, பதவியிலிருந்து அகற்றப்பட்ட சர்வாதிகாரி பஷார் அல்-அசாத்துக்கு, அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதித்து சிரிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டிசம்பர் 2024-ல் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அவரது குடும்பத்தின் ஐம்பதாண்டு கால அதிகாரப் பிடிப்பு முடிவுக்கு வந்த பிறகு, அவர் தனது குடும்பத்துடன் டமாஸ்கஸிலிருந்து மாஸ்கோவிற்குத் தப்பிச் சென்றார். அவருக்கு எதிரான முதல் தண்டனை இதுவாகும் .
அசாத்தின் உறவினரும், தெற்கு சிரியாவின் டெரா மாகாணத்தின் முன்னாள் அரசியல் பாதுகாப்புத் தலைவருமான அதெஃப் நஜிப்பிற்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, நீதிபதி அவரது தண்டனையை வாசித்தபோது, நீதிமன்ற அறையில் ஒரு கூண்டிற்குள் கோடுகள் போட்ட சிறை சீருடையை அணிந்து முன்னிலையானார்.
அசாத்தின் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியின் பிறப்பிடமாக டெரா பரவலாகக் கருதப்படுகிறது.
மார்ச் 2011-ல், அரசாங்கத்திற்கு எதிரான சுவரெழுத்துக்களை எழுதியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு குழு இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவம், நகரில் போராட்டங்களைத் தூண்டியது. இந்தப் போராட்டங்கள் பாதுகாப்புப் படையினரின் வன்முறை அடக்குமுறைக்கு உள்ளாயின.
அந்த எதிர்வினை, நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிவிட உதவியது. அது உள்நாட்டுப் போராக முற்றியதில், இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்ட அசாத் ஆட்சியுடன் தொடர்புடைய அதிகாரிகளை, சிரியாவின் இடைக்கால அரசாங்கம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் விசாரிக்கத் தொடங்கியது.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட உயர் பதவியில் உள்ள அதிகாரிகளில் நஜிப்பும் ஒருவர்.
கொலை, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேண்டுமென்றே கொல்லுதல் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் சித்திரவதை உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர் தண்டிக்கப்பட்டார்.
பஷார் அல்-அசாத்தின் தம்பியான மஹேர் உட்பட, ஆறு முன்னாள் இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அவர்கள் இல்லாத நிலையில் மரண தண்டனை விதித்தது. அவர் இராணுவத்தின் உயரடுக்கு நான்காவது பிரிவை வழிநடத்தினார் மேலும் ஆட்சி கவிழ்ந்தபோது மாஸ்கோவிற்குத் தப்பிச் சென்றார்.
தண்டிக்கப்பட்ட மற்றவர்களில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஃபஹத் அல்-ஃபிரேஜும் அடங்குவார்.
நௌஹா அல்-மஸ்ரி இந்தத் தருணத்திற்காக 15 ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்.
அவர் ஐந்து பேர் கொண்ட அரசுத் தரப்புக் குழுவில் ஒரு பகுதியாக இருப்பது மட்டுமல்லாமல், இந்த வழக்கில் ஒரு வாதியாகவும் இருக்கிறார்.
மார்ச் 2011-ல் டேராவில் உள்ள அல்-ஒமாரி சதுக்கத்தில் நடந்த அடக்குமுறை மற்றும் படுகொலையின் போது மஸ்ரி தனது சகோதரரை இழந்தார்.
இந்தத் தீர்ப்பு, நாங்கள் செய்த தியாகங்களின் மகத்துவத்தையும், தியாகிகளின் தியாகங்களையும், பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் கைதிகளின் துன்பத்தையும் வலியையும் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.
எங்கள் இரத்தத்தைச் சிந்திய, குற்றங்களைச் செய்த, எங்கள் உரிமைகளை மீறிய, எங்களைக் கொன்ற, சித்திரவதை செய்த அனைவருக்காகவும், எங்கள் உரிமைகளில் ஒரு சிறு பகுதியையாவது மீட்டெடுக்க நாங்கள் 15 ஆண்டுகளாகக் காத்திருக்கிறோம் என்றார்.
விசாரணைகளின் முடிவாக இது இருக்கக்கூடாது என்பதே எங்கள் கோரிக்கை. புதிய சிரியாவில், இன்றிலிருந்து தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை இருக்காது.
சிரியாவின் புதிய அதிகாரிகள், பஷார் மற்றும் மஹேர் அல்-அசாத் ஆகியோரை மாஸ்கோவிலிருந்து நாடு கடத்துவதை உறுதி செய்ய முடியுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
சிரியாவின் புதிய தலைமை, அசாத்துக்கு எதிராக எடுக்கும் முதல் நடவடிக்கை இதுவல்ல.
கொலை மற்றும் சித்திரவதை குற்றச்சாட்டுகளின் பேரில் கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அசாத் வம்சத்தை வீழ்த்திய, தற்போதைய சிரியாவின் ஜனாதிபதியான அகமது அல்-ஷரா தலைமையிலான படைகள், 11 நாட்களில் நடந்த ஒரு விரைவான இராணுவ நடவடிக்கையில் ஆட்சிக்கு வந்தபோது, அவர் ரஷ்யாவுக்குப் புறப்பட்டார்.
அதன் பின்னர், புதிய அரசாங்கம் ஏராளமான முன்னாள் அதிகாரிகளையும் பாதுகாப்புப் பணியாளர்களையும் தடுத்து வைத்துள்ளது. இருப்பினும், அசாத் உட்பட பழைய ஆட்சியின் பெரும்பாலான மூத்த தலைவர்கள் ரஷ்யாவில் பிடிபடாமல் உள்ளனர்.
அசாத்தின் ஆட்சியின் இறுதி ஆண்டுகளில், மேற்கத்திய நாடுகளில் உள்ள நீதிமன்றங்கள் மூலம் அவரைப் பின்தொடர சிரிய எதிர்க்கட்சித் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எந்தவொரு தண்டனைக்கும் வழிவகுக்கவில்லை.
தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு 2000-ஆம் ஆண்டில் அசாத் ஆட்சிக்கு வந்தார். ஹபீஸ் அல்-அசாத்தின் இரண்டாவது மகனான அவர்டி1994-ல் தனது சகோதரர் பேசில் ஒரு கார் விபத்தில் இறக்கும் வரை சிரியாவின் ஆட்சியாளராகும் நிலையில் இருக்கவில்லை.
அலவைட் சிறுபான்மையினரின் ஒரு பகுதியாக இருந்த அவர் இராணுவம், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்புகளில் பல பதவிகளில் அவர்களின் ஆதிக்கத்தை தொடர்ந்து ஆதரித்தார்.
அவரது ஆட்சியின் பெரும்பகுதி உள்நாட்டுப் போரால் வரையறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
