அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரதநாட்டியக் கலை வளர்ச்சிக்கும், அடுத்த தலைமுறை கலைஞர்களை உருவாக்குவதற்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மூத்த நாட்டிய ஆசிரியரும், கலாகீர்த்தி விருது பெற்றவருமான திருமதி சாந்தினி சிவநேசன் அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் சிறப்பு நிகழ்வும், “கலாபவனக் கீர்த்தி” ஆவண நூல் வெளியீட்டு விழாவும் எதிர்வரும் 2026 ஆகஸ்ட் 16 ஆம் திகதி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் பரதநாட்டியத்தின் தந்தை எனப் போற்றப்படும் கொக்குவில் கலாபவனத்தின் நிறுவனர் அமரர் ஏரம்பு சுப்பையா அவர்களின் புதல்வியான திருமதி சாந்தினி சிவநேசன், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் ஓய்வுநிலை விரிவுரையாளராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றியதுடன், பல தலைமுறைகளாக பல மாணவர்களையும் பரதநாட்டிய ஆசிரியர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியவராகத் திகழ்கிறார்.
உலகின் பல நாடுகளில் பரதநாட்டியம் செழித்து வளர்வதற்கு அடித்தளமாக அமைந்த கற்பித்தல், கலை ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் அவர் ஆற்றிய பங்களிப்பு கலை உலகில் உயர்ந்த மதிப்பைப் பெற்றுள்ளது. அவரது நீண்டகால கலைச் சேவையைப் போற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு, பரதநாட்டிய வரலாற்றில் முக்கியமான ஒரு தருணமாகவே கூறலாம்.
திருமதி சாந்தினி சிவநேசன் அவர்களின் கலைப்பணி மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்தும் சிறப்புற அமைய இவ்வேளை எமது வாழ்த்தையும் உயர் பரதக்கலைக்குருவான அவருக்குத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறோம்
