யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளை கொட்டிய , வலி.தெற்கு பிரதேச சபை அவற்றை மீள அள்ள வேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபை காலக்கெடு விதித்தும் குப்பைகள் மீள அள்ளப்படாமல் , தீயிட்டு கொளுத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு கடந்த 20ஆம் திகதி தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.
அதன் போது சபை ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழப்பட்ட பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான முறையில் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகளை கொட்டியமை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, கொட்டப்பட்ட கழிவுகளை வலி. தெற்கு பிரதேச சபையினர் செப்டெம்பர் 13ஆம் திகதிக்கு முன்னர் மீள அள்ள வேண்டும் எனவும் , அது தொடர்பிலான அறிவித்தலை வலி. தெற்கு பிரதேச சபைக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 13ஆம் திகதியுடன் குப்பைகளை மீள அள்ள கொடுத்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் , வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் இன்றைய தினம் குப்பைகள் கொட்டப்பட்ட பகுதிக்கு சென்ற வேளை குப்பைகள் மீள அள்ளப்படாது , தீயிட்டு கொளுத்தப்பட்ட நிலையில் ,குப்பை மேட்டில் இருந்து புகை எழுந்த வண்ணம் காணப்பட்டுள்ளது.
அது தொடர்பில் அயலில் வசிக்கும் மக்களிடம் உறுப்பினர்கள் வினாவிய போது , தொடர்ந்து குப்பைகள் அப்பகுதிகளில் கொட்டப்படுவதாகவும் , குப்பைகளுக்கு தினமும் தீ வைப்பதனால் எழும் புகை மண்டலத்தால் , வீடுகளில் மூச்சு விட சிரமப்படும் நிலையிலே வாழ்கின்றோம். இதனை நிறுத்துமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்த போதிலும் , தம்மை பற்றி யாரும் கவனத்தில் எடுக்கவில்லை என கவலை தெரிவித்துள்ளனர்
அதேவேளை அனுமதியின்றி கழிவுகளை கொட்டியமை தொடர்பில் பிரஸ்தாபிப்பதற்கு என இன்றைய தினம் திங்கட்கிழமை சிறப்பு கூட்டத்தினை நடாத்துவது எனவும் , அதன் போது, வலி. தெற்கு பிரதேச சபையினர் கழிவுகளை மீள அள்ளாது விடின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கூட்டத்தில் தீர்மானிப்பதாக கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அந்நிலையில் குறித்த கூட்டம் இன்றைய தினம் நடைபெறவில்லை. கூட்டம் நிறுத்தப்பட்டமை தொடர்பில் சபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கவில்லை எனவும் , எதிர்வரும் வியாழக்கிழமை சபையின் வழமையான மாதாந்த கூட்டத்திற்கே கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் , சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
