யாழில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற “நீதிக்கான நீள் பயணம்” அனைத்துலக மாநாடு!
யாழ்ப்பாணம் | 30.08.2026
அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு–கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் “நீதிக்கான நீள் பயணம்” எனும் கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துலக மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை (30.08.2026) யாழ்ப்பாணத்தில் மிகுந்த உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமான இம்மாநாட்டிற்கு முன்னதாக, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து பேரணியாக தந்தை செல்வா கலையரங்கிற்கு வருகை தந்த பங்கேற்பாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும், உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும், பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் வடக்கு–கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களின் தலைவர்கள், சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் தமது உறவுகளை மீட்பதற்காகவும் அவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காகவும் நீண்டகாலமாகப் போராடி வரும் குடும்பங்களின் பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
மேலும், வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள், தமிழர் தாயகத்தின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், பல்வேறு சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் தமிழ்த் தேசிய சிந்தனையுடன் பயணிக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் ஆளுமைகள் உள்ளிட்ட பலரும் மாநாட்டில் பங்கேற்று தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் போராட்டங்களுக்கு அரசியல் மற்றும் சிவில் சமூக ஆதரவு அவசியமானது என்பதை வலியுறுத்திய பங்கேற்பாளர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நிலை தொடர்பான உண்மையை வெளிக்கொணர்வதற்கும், பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் சர்வதேச நீதிப் பொறிமுறையின் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், மாநாட்டில் தாயகத்தின் பல்வேறு அரசியல் மற்றும் சிவில் சமூகத் தரப்பினர் பங்கேற்று ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சிவி.கே. சிவஞானம் ஆகியோர் மாநாட்டை புறக்கணிப்பதாக நேற்று அறிக்கை வெளியிட்டிருந்ததுடன், இன்று நடைபெற்ற மாநாட்டிலும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.
கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கும் நிலைப்பாடுகள் தொடர்பிலும், போர்க்குற்ற விசாரணைகளில் விடுதலைப் புலிகளையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்துக்கள் தொடர்பிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த இருவரின் மாநாட்டுப் புறக்கணிப்பு தொடர்பிலும் பங்கேற்பாளர்கள் மத்தியில் கவனம் செலுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் போராட்டத்திற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
பல தசாப்தங்களாக நீடித்து வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு நீதியும் உண்மையும் கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என்பதை மாநாட்டில் கலந்து கொண்ட குடும்பங்கள் மீண்டும் வலியுறுத்தியதுடன், “நீதிக்கான நீள் பயணம்” தொடரும் என்ற உறுதியையும் வெளிப்படுத்தினர்.
