* பாலஸ்தீன, ரோஹிஞ்சா இளந்தலைமுறையினர் கற்ற பாடங்கள் என்ன?
* உயிர்த்தியாகங்கள் – சொத்துரிமை இழப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் ஈழத்தமிழ் அரசியல் நியாயம்..
* இந்துக் கல்லூரிகளின் விவாத அரங்கில் சிறந்த உதாரணமாகும் விரிவுரையாளர் சர்வேஸ்வரா!
— — —
1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்த பின்னர், மக்கள் தொகையைப் பெருக்கும் நோக்கில் 1946 முதல் 1964 ஆம் ஆண்டு வரை பிறந்த குழந்தைகள் ‘பேபி பூமர்ஸ்’ (Baby Boomers) என அழைக்கப்பட்டனர்.
அடுத்தடுத்து மிக வேகமாகக் குழந்தைகள் பிறந்த காலப்பகுதி என்பதால் இத்தலைமுறைக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 1965 முதல் 1980 வரை பிறந்தவர்கள் ‘ஜெனரேஷன் எக்ஸ்’ (Generation X) என்றும், 1981 முதல் 1996 வரை பிறந்தவர்கள் ‘ஜெனரேஷன் வை’ (Generation Y அல்லது Millennials) என்றும் அழைக்கப்பட்டனர்.
1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள் ‘ஜெனரேஷன் இஸட்’ (Generation Z) என்றும், 2013 முதல் 2024 வரை பிறந்தவர்கள் ‘ஜெனரேஷன் அல்ஃபா’ (Generation Alpha) என்றும் வகைப்படுத்தப்படுகின்றனர்.
அந்த வரிசையில், 2025 ஆம் ஆண்டு முதல் தற்போதைய 2026 ஆம் ஆண்டு வரை பிறக்கும் குழந்தைகள் புதிய தலைமுறையான ‘ஜெனரேஷன் பீற்ரா’ (Generation Beta) என்று அழைக்கப்படுகிறார்கள்.
ஆகவே, அந்தந்தக் காலகட்டங்களில் வாழ்ந்த இளந்தலைமுறையினர், குறிப்பாக ஈழத்தமிழ் இளந்தலைமுறையினர், தத்தமது காலச் சூழலுக்கு ஏற்பச் சரியாகவே இயங்கியிருக்கிறார்கள்.
1946 முதல் 1964 ஆம் ஆண்டு வரையிலான ‘பேபி பூமர்ஸ்’ காலகட்டம் தொட்டு, ‘ஜெனரேஷன் வை’ நிறைவடையும் 1996 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் பிறந்தவர்கள் இளந்தலைமுறையினராக இருந்தபோதே, ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டம் அகிம்சை வழியிலிருந்து ஆயுதப் போராட்டமாக மாறி உச்சத்தைத் தொட்டது.
அதாவது, காலப்பகுதியில் பிறந்தவர்கள் இளையோராக இருந்தபோதே, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் அகிம்சைப் பாதையிலிருந்து ஆயுதப் போராட்டமாக உருமாறி உச்சம் பெற்றது.
ஆனால், 1946 ஆம் ஆண்டிற்கு முன்னர் பிறந்த முந்தைய தலைமுறையினர் எடுத்த தவறான அரசியல் முடிவுகளும், தொலைநோக்கற்ற தலைமைகளின் வழிகாட்டல்களுமே, 1950களுக்குப் பின் பிறந்த இளந்தலைமுறையின் வாழ்வும் எதிர்காலமும் சிதைந்துபோனதற்குக் ‘காரண காரியங்கள்’ என்பதுதான் கசப்பான உண்மை.
ஈழத்தமிழ் இளைஞர்களின் வாழ்வு இவ்வாறான பேரழிவைச் சந்தித்ததற்கு, ஆயுதம் ஏந்தி உயிர்த்தியாகம் செய்த போராளிகள் மற்றும் அநியாயமாகக் கொல்லப்பட்ட பொதுமக்கள் என்ற உள்நாட்டுப் போர்ச்சூழல் மாத்திரமே காரணமல்ல; இளைஞர்களின் அப்போராட்டம் முற்றிலும் நியாயமானது.
ஆனால், அதையும் கடந்து, இந்தியப் பெருங்கடலின் புவிசார் அரசியலும், பிராந்திய ஆதிக்க எண்ணம் கொண்ட இந்தியாவின் ‘பெரியண்ணன்’ மனப்பான்மையுமே இப்பேரழிவின் பின்னணியில் இருந்த முதன்மையான புறக்காரணிகளாகும் என்பது வெளிப்படையானது.
ஆகவே, கல்வியைத் தொலைத்து, இளமைப் பருவத்து இன்பங்களைத் துறந்து, தாயக மீட்புக்காகத் தன்னுயிரை ஈந்த அந்த இளந்தலைமுறையின் தியாகத்தைப் பற்றி இனிவரும் சந்ததியினருக்கு கற்பிக்க வேண்டியது அவசியமாகும்.
குறிப்பாக 1997 முதல் 2012 வரை பிறந்த ‘ஜெனரேஷன் இஸட்’, 2013 முதல் பிறந்த ‘ஜெனரேஷன் அல்ஃபா’ வரையும், பிறந்த இளந் தலைமை தாமாகவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
பாலஸ்தீன இளந் தலைமையினர், முந்தைய தலைமுறையினர் பாரம்பரிய அரசியல் கட்சிகளையும் (Fatah / Hamas), சர்வதேச உடன்படிக்கைகளையும் (Oslo Accords) அதிகம் நம்பி ஏமாந்தனர் என்பதைப் புரிந்து கொண்டார்.
இதனால், தற்போதைய இளந்தலைமுறை எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் குழுவையும் சாராமல், டிஜிட்டல் ஊடகங்கள் (TikTok, Instagram) மூலம் தங்களின் சொந்தப் போராட்டங்களை உலகிற்கு நேரடியாகக் கொண்டு சேர்க்கும் புதிய உத்தியைக் கையாண்டு, உலகளாவிய ஆதரவைத் திரட்டுகிறது.
கலை, கவிதை, ஹிப்-ஹாப் இசை மற்றும் டிஜிட்டல் ஆவணக் காப்பகங்கள் (Digital Archives) வழியாக அடுத்த தலைமுறைக்கு வரலாற்றை பலஸ்தீன இளைஞர்கள் கடத்துகிறார்கள்.
1948 இல் நடந்த ‘நக்பா’ (Nakba – பேரழிவு – இடப்பெயர்வு) சம்பவத்தை, தங்களின் தாத்தா-பாட்டிமார்கள் வாய் மொழியாகக் கூறிய கதைகள், பாதுகாத்து வைத்திருந்த தங்களின் பூர்வீக வீட்டுச் சாவிகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் பாலஸ்தீன இளந்தலைமுறை கற்றுக் கொண்டது.
அதேவேளை, மியான்மர் இராணுவத்தின் ஒடுக்குமுறைகள் மற்றும் 2017 இனப்படுகொலைக்குப் பின்னர், வங்காளதேச அகதி முகாம்களில் வாழும் ரோஹிஞ்சா இளந்தலைமுறை தங்களின் பூர்வீக அடையாளத்தையும், குடியுரிமை பறிக்கப்பட்ட வரலாற்றையும் தங்களின் பெற்றோர்கள் வழியாகக் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
முந்தைய தலைமுறை தங்களுக்கு நடந்த அநீதிகளை ஆவணப்படுத்தத் தவறியதே உலகம் தங்களைக் கைவிட்டதற்குக் காரணம் என்பதை உணர்ந்தனர்.
எனவே, தற்போதைய இளைஞர்கள் ‘ஸ்மார்ட்போன்’ (Smartphones) மற்றும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, அகதி முகாம்களில் இருந்து கொண்டே தங்களின் கல்வி உரிமை மற்றும் மனித உரிமைப் போராட்டங்களை சர்வதேச நீதிமன்றங்கள் வரை கொண்டு செல்லும் விழிப்புணர்வைப் பெற்றுள்ளனர்.
முகாம்களில் முறையான கல்வி இல்லாத நிலையிலும், தங்களின் பாரம்பரியப் பாடல்கள் (Rohingya Tarana) மற்றும் சுயாதீன செய்தித்தாள்கள் (Rohingya Photography – Media Hubs) மூலம் சிறுவர்களுக்கு வரலாற்றைக் கற்பிக்கிறார்கள்.
இப்பின்னணியில், கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் சங்கங்கள் இணைந்து நடத்திய விவாதத்தை நோக்க வேண்டும்.
மூத்தவர்கள், அனுபவசாலிகள் என்று கூறிக்கொண்டு தலைமைப் பதவிகளை வகித்த அரசியல் பிரதிநிதிகள், இளந்தலைமுறையினர் பற்றி புரிந்து கொள்ளத் தவறியமை குறித்து, யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் இ. சர்வேஸ்வரா நிகழ்த்திய உரை ஆழமானது. மிக நாகரிகமாக எடுத்துரைத்தார்.
விவாதம் என்ற பெயரில் ஈழத்தமிழ் அரசியல் போராட்டங்களை நகைச்சுவையாக்கி மலினப்படுத்தும் கம்பன் கழகப் பேச்சாளர்கள் சிலருக்கு மத்தியில் சர்வேஸ்வராவின் உரை நல்ல சிந்தனையை தூண்டியது.
அவரைத் தவிர அங்கு உரை நிகழ்த்திய வேறு சில இளைஞர்களும் தங்களின் கருத்துக்களை மிகவும் பக்குவமாக முன்வைத்தனர்.
”முந்து தமிழ் மாலை” நிகழ்வின் விவாதம் தொடர்பாக, 31-07-2026 அன்று நான் முன்வைத்த விமர்சனத்துக்கு ஏற்புடையதாக சில பேச்சாளர்களின் உரைகள் அமைந்திருந்தன. அவர்களுக்கு பாராட்டுகள்!
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-
