இலங்கை ஜனாதிபதி ததான் பாதாள உலக கும்பலின் கொலை அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டு, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள 236 பேருக்கு எதிராகச் சர்வதேசக் காவற்துறையினரின் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகக் காவற்துறைத் தலைமையகம் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இவ்வாறு சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நபர்களில் 96 பேர் தேடப்பட்டு வரும் பிரதான ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குற்றவாளிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசக் காவற்துறையின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் கைது நடவடிக்கைகள் தொடர்பான உத்தியோகபூர்வ பின்னணி விபரங்களின்படி
கடந்த 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 37 பேர் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு வெற்றிகரமாக அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இது தவிர, சர்வதேசக் காவற்துறையின் விசேட ஒருங்கிணைப்பு மற்றும் பிடியாணை உத்தரவுகளின் ஊடாக மேலும் 42 குற்றவாளிகள் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் காவற்துறையினர் மேலும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
