கடந்த இரண்டு தேர்தல்; விஞ்ஞாபனங்களிலும் பரப்புரை மேடைகளிலும் ஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்தி ஊழல் ஒழிப்பு நடவடிக்கையையே முக்கியமாகத் தெரிவித்து வந்தது. ராஜபக்சக்களின் இளவரசர் என்றும் நாட்டின் அடுத்த ஜனாதிபதி என்றும் அவரது கட்சியினரால் மேலெழுப்பப்பட்டு வந்த நாமலின் எதிர்காலம் முளையிலேயே கிள்ளப்படுவதாக எதிர்க்கட்சியினர் அவர் மீதான நிகழ்கால நடவடிக்கைகள் விமர்சிக்கின்றன. நாமலுக்கு ஆதரவாக ரணில் தெரிவித்திருக்கும் கருத்து சஜித்தை அரசியலிலிருந்து ஒதுக்குவதற்கான அவரது குள்ளநரித் தந்திரமென்பது அனைவருக்கும் தெரிகிறது.
அரசியலில் சிலரை மையப்படுத்தி சிலவேளைகளில் ஒரு காற்று அடிக்கும். இது தென்றலாக இருக்குமா அல்லது புயலாக இல்லையெனில் சூறாவளியாக மாறுமா என்று உடனடியாகத் தெரியாது. கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கடந்த ஒரு வாரமாக இலங்கை அரசியலில் இந்தக் காற்று நாமல் ராஜபக்சவை நோக்கி அடித்தது. ராஜபக்சக்களின் இளவரசர் என்றும் ஷபேபி| என்றும் அழைக்கப்படும் நாமலின் எதிர்காலம் ராசியானதாக இருக்குமா அல்லது ராசியில்லாத ராஜாவாக இருக்குமா என்பதை இப்போது சொல்ல முடியாது.
இலங்கை அரசியலில் ராஜபக்ச குடும்பத்துக்கு எண்பது ஆண்டுகளை எட்டும் தொடர்பு உண்டு. இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் ஐக்கிய தேசிய கட்சியின் முதலாவது ஆட்சியில் அமைச்சராகவிருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க, 1951 செப்டம்பரில் அமைச்சர் பதவியை துறந்துவிட்டு அக்கட்சியிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சிக்கு சென்றபோது முதலாவது ஆளாக அவரோடு சேர்ந்து எதிர்திசைக்குப் போனவர்களில் டி.ஏ. ராஜபக்ச முக்கியமானவர்.
இதனால் பண்டாரநாயக்க 1952 செப்டம்பர் 27ம் திகதி சிறிலங்கா சுதந்திர கட்சியை ஆரம்பித்தபோது அதன் நிறுவக உறுப்பினராக டி.ஏ.ராஜபக்ச அமைந்தது வரலாறு. இவரது சகோதரரான டி.பி.ராஜபக்ச மற்றும் இவரது பிள்ளைகள் என்பதுடன் நிற்காது, டி.ஏ.ராஜபக்சவின் பிள்ளைகளான மகிந்த, சாமல், பசில், கோதபாய என்ற தொடர் நாமல் ராஜபக்சவையும் அரசியலில் உள்வாங்கியது. மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர்களும் உருவாக்கிய பொதுஜன பெரமுன கட்சியின் ஊடாக கடந்த தேர்தலில் போட்டியிட்டவர்கள் படுதோல்வியடைந்தனர். கிடைத்த மூன்றரை லட்சம் வாக்குகளால் இக்கட்சிக்கு இருவர் மட்டும் தெரிவாக, நாமல் ராஜபக்சவுக்கு தேசிய பட்டியல் இடம் கொடுத்தது.
இருப்பினும், இவரையே தங்கள் கட்சியின் அடுத்த ஜனாதிபதி தேர்தல்(?) வேட்பாளர் என்று ஆரம்பத்தில் கூறிவந்த பொதுஜன பெரமுன, பின்னர் இவரே அடுத்த ஜனாதிபதி என்றும் அறிமுகம் செய்ய ஆரம்பித்தது. அந்தத் தொப்பியை விருப்புடன் லாவகமாக எடுத்து தமது தலையில் அணிந்து கொண்ட நாமல் ராஜபக்ச நாடு தழுவிய ரீதியில் பெருமளவு ஆதரவு சேர்க்கும் கூட்டங்களை நடத்த முயற்சித்த வேளையில் அவருக்குச் சோதனை வந்தது.
நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழி நாமலுக்கு மிகவும் பொருந்தும். தொடர்ந்து அநுர அரசுக்கு எதிராக இவர் தொடுத்து வந்த சவாலுக்கு அநுர அரசு தங்கள் செயல் மூலம் பதிலளிக்க கொஞ்சக் காலம் சென்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி.யின் மறுவடிவம்) மீண்டும் மீண்டும் ஒன்றையே கூறிவந்தது. ஷஊழல் ஒழிப்பு| என்ற இரட்டைச் சொல்லே அது. ராஜபக்ச குடும்பம் அல்லது ராஜபக்ச சகோதரர்களும் வாரிசுகளும் அவர்கள் ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட கையூட்டல், கையாடல், வெளிநாடுகளில் பதுக்கி வைத்த கோடிக்கணக்கான பணம் போன்ற கொள்ளை, களவு ஆகிய ஊழல்களை தமது அரசு வெளிக்கொண்டு வரும் என்பதே தேசிய மக்கள் சக்தி ஒவ்வொரு மேடையிலும் மந்திர வார்த்தைகளாக உச்சாடனம் செய்தது.
புலிகள் அழிப்பு, பயங்கரவாத ஒழிப்பு என்ற மாய வார்த்தைகளில் அள்ளுப்பட்டு ராஜபக்சக்களை ஜனாதிபதிகளாகவும், பிரதமர்களாகவும், அமைச்சர்களாகவும் கதிரையேற்ற தங்கள் வாக்குகளை அள்ளிப்போட்டவர்கள் (பெரும்பான்மை இனத்தவர்களே இதிலும் பெரும்பான்மை) ஒரு மாற்றத்தை விரும்பி தங்கள் வாக்கை மாற்றிக் கொண்டனர். தேசிய மக்கள் சக்தியை நம்பியதால் கிடைத்தது இந்த மாற்றம். இது விடயத்தில் வடக்கு கிழக்கு மக்களில் கணிசமானவர்களும் அடங்குவர்.
ஆட்சிக்கு வந்த அநுர தலைமையிலான அரசு தேர்தல் வாக்குறுதியான ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை முதல் வருடத்தில் எதிர்பார்த்தளவுக்கு மேற்கொள்ளவில்லை. அதற்குத் தேவையான தரவுகள், சாட்சியங்கள், ஆவணங்களை சேகரிப்பதிலும், நாட்டில் புரையோடிக் கொண்டிருந்த போதைவஸ்தைத் தடுப்பதிலும் அரசின் கவனம் இருந்தது. பொருளாதார மீட்சியுடன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை ஆர்ப்பாட்டமின்றி மேற்கொண்டு வந்தது.
இச்சந்தர்ப்பத்தில்தான் அநுர அரசுக்கு நேரடியாக சவால் விடும் அரசியல்வாதியாக நாமல் தம்மை முன்னிலைப்படுத்த ஆரம்பித்தார். வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட பணத்தை மீட்க மாட்டீர்களா என்ற சவால் ஒவ்வொரு மேடையிலும், நாடாளுமன்ற உரைகளிலும் இவரால் முன்வைக்கப்பட்டு வந்தது. ராஜபக்ச குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் தமது தந்தை மீதும், அவரது பிள்ளைகளான மூவர் மீதும் அநுர அரசு கடும்போக்கில் செயற்படமாட்டாது என்று நாமல் நம்பியிருந்ததாக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற இவரது முன்னைய தோழர்கள் சிலர் பொதுவெளியில் தெரியுமளவுக்கு இப்போது கூறி வருகின்றனர்.
இதற்கான காரணமாக 1987-1989 காலப்பகுதியில் மகிந்த ராஜபக்சவுக்கும் ஜே.வி.பிக்கும் இருந்த நெருக்கமான தொடர்பு சொல்லப்படுகிறது. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.வி.பி. கட்டுமீறிய ஆர்ப்பாட்டங்களை அப்போது மேற்கொண்டிருந்தது. இதனை முறியடிக்க ஜே.வி.பி.யின் ஆதரவாளர்கள் என்று கூறப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களை அரச படைகள் கொலை செய்தன. கழுத்தில் ரயர்கள் போட்டு எரிக்கப்பட்டவர்களும், தலையில்லாத முண்டங்களான உடலங்களும், கடல்களிலும் வாவிகளிலும் வீசப்பட்ட அடையாளம் தெரியாத சடலங்களும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஊட்டின. ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசு இக்கொலைகளுக்கு பூரண அனுமதியை படையினருக்கு வழங்கியிருந்தது.
அப்போது மகிந்த ராஜபக்ச, தோல்வியடைந்த முன்னாள் எம்.பியாக அம்பாந்தோட்டையிலுள்ள இல்லத்தில் வசித்து வந்தார். பதவி இழந்திருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆதரவுடன் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசின் மனித உரிமை மீறல்களை ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்புக்கு பல தடைகளைத் தாண்டி மகிந்த எடுத்துச் சென்றார். இலங்கையில் இடம்பெற்ற சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள், நீதி விசாரணையற்ற காணாமல் போனோர்கள் விவகாரம் என்பவற்றை முதன்முதலாக ஜெனிவாவுக்கு எடுத்துச் சென்றவர் மகிந்த ராஜபக்சதான். (பின்னர் தமது ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை ஜெனிவா கண்டித்தபோது அதனை நிராகரித்தவரும் இவரே என்பது இன்னொரு பக்கக்கதை).
Language Resources
சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்னர் மகிந்த ராஜபக்ச தங்கள் தரப்புக்கு ஆதரவாக ஜெனிவா வரை சென்றவர் என்ற காரணத்தினால் அவர் மீது அல்லது அவர் குடும்பத்தின் மீது கடும்போக்கில் ஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை மேற்கொள்ளாது என்று நாமல் ராஜபக்ச நம்பியிருந்ததாக அவரது பழைய கூட்டாளிகள் தங்களுக்குள் பேசி வருகின்றனர்.
ஊழல் ஒழிப்பை தங்கள் அரசின் பிரதான செயற்பாடாக கூறி வந்த அநுர அரசு தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியவாறு அதனை நிறைவேற்ற ஆரம்பித்துள்ளது தெரிகிறது. ஆனால் இதனை அரசியல் பழிவாங்கல் என்று மகிந்த ராஜபக்சக்களுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒட்டியிருந்த ரணிலும் கூறி வருவதுதான் இப்போது பிரதான பேசுபொருளாகியுள்ளது. அரகலய போராட்ட காலத்துக்கு முன்னர் ராஜபக்சக்களின் ஊழலை பகிரங்கமாகச் சாடி வந்தவர் தாமே என்பதை மறந்துவிட்ட ரணில், இப்போது அவர்களுக்காக உருகி வழிவது வேடிக்கையானது. இது, உண்மையிலேயே ராஜபக்சக்களுக்கான ஆதரவு என்பதைவிட, சஜித் பிரேமதாசவை அரசியலிலிருந்து ஓரங்கட்டுவதற்கான ஒரு செயற்பாடாகவே அவர் மேற்கொள்வது அப்பட்டமாகத் தெரிகிறது.
நாமல் ராஜபக்ச கைது, சட்ட நடவடிக்கை, விளக்கமறியல் ஆகியவைகளை ரணில் பகிரங்கமாகக் கண்டித்ததுபோல் சஜித் பிரேமதாச இதுவரை எதுவுமே கூறாமல் அசாதாரண மௌனம் சாதித்து வருகிறார். நாமல் மீது அநுர அரசு மேற்கொண்டிருக்கும் சட்டப்படியான நடவடிக்கைகள் அவரை அரசியலில் மேலெழ வைத்துவிடலாம் என்ற அச்சம் சஜித்திடம் இருப்பதை அவரது மௌனம் பகிரங்கப்படுத்துகிறது. ரணில் நாமலுக்கு ஆதரவாக செயற்படுவதும் இதற்காகவே என்பதும் சஜித்துக்குப் புரியும்.
எதுவானாலும், நேற்று 12ம் திகதி அநுராதபுரத்தில் நாமலால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுஜன பெரமுனவின் கூட்டத்தின் அறுவடையே அடுத்த நகர்வு என்ன என்பதற்கான கருவாக இருக்கும். . ஆனால், நாமல் விவகாரம் ராஜபக்ச குடும்பத்துடனான ஒரு தொடர்கதையாவதற்கான சாத்தியமே பெரிதளவில் காணப்படுகிறது.
