ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கில், முக்கிய சாட்சியமான முன்னாள் போராளியொருவரை மீண்டும் சாட்சியமளிக்க அழைப்பதற்கு தடை விதிக்குமாறு கோரி பாதுகாப்புத் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
மனுமீதான வழக்கு கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவின் மின்னேரியா சித்திரவதைக்கூடத்தில் கொல்லப்படுவதற்கு முன்னதாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரகீத் எக்னெலிகொட சித்திரவதைகளால் நடமாட முடியாதிருந்துள்ளார்.அப்போது அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி அவரிற்கான உதவிகளை வழங்கியுள்ளார்.
பிரகீத் காணாமல் போனமை முன்னதாக நடைபெற்ற விசாரணையொன்றின்போது, வழக்குத் தொடுநர் தரப்பு நான்காவது சாட்சியான சுமதிபால சுரேஸ் என்றழைக்கப்படும் முரளியை மீண்டும் சாட்சியமளிக்க அழைக்க நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தது.
இந்;நிலையில் சாட்சியை மீண்டும் அழைப்பதற்கு தடை விதிக்கும் உத்தரவைப் பெறுவதற்காக உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு விசேட நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
அதன்படி, பாதுகாப்புத் தரப்பினரால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், மனுவின் பிரதிகளும் விசேட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே கோத்தபாய ஜனாதிபதியாக பதவியேற்ற காலத்தில் அச்சுறுத்தப்பட்டு பிறழ்சாட்சியமளிக்க முன்னாள் போராளி நிர்பந்திக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் மீள சாட்சியமளிக்குமிடத்து கடந்த கால ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய படை அதிகாரிகள் பலரும் கைதாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
