வலிகாமம் வடக்கின் உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளை விடுவிக்க கோரி மீண்டும் மக்கள் வீதிகளில் போராட இறங்கியுள்ளனர்.
மயிலிட்டி காணிக்கை மாத ஆலய பெருநாளுக்கு முன்னர் ஆலயத்தினையும் அதனை சூழவுள்ள பகுதிகளையும் விடுவிக்குமாறு கடந்த பெப்ரவரி மாதத்திற்கு முதல் பாதிரியார்கள், அப்பகுதி மக்கள் என பலதரப்பினரிடமும் கோரி அது சாத்தியமாகவில்லை.
பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கான பாதையில் இராணுவத்தினரின் வாகன திருத்தகம் காணப்படுவதால் , ஆலயத்திற்கு செல்லும் பாதை விடுவிக்கப்படவில்லை.
தனியார் காணிகள் ஊடான தற்காலிக பாதை ஊடாகவே அம்மனை தரிசிக்க மக்கள் சென்று வருகின்றனர்.
அந்நிலையில் கடந்த மாதம் தனியார் காணி ஊடாக செல்லும் தற்காலிக பாதையை நிரந்தர பாதையாக மற்றும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்ட வேளை வலி,வடக்கு பிரதேச சபை அதனை தடுத்து நிறுத்தி இருந்தது.
இன்னமும் வாகன திருத்தகத்தை அகற்றி , அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையை விட இராணுவத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
மயிலிட்டி பகுதியில் உள்ள இராணுவத்தினரின் “கொமோண்டோ பங்களா” அமைந்துள்ள காணிகளையும் , அதனை சூழவுள்ள பகுதியை விடுவிக்குமாறும் , அப்பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதிக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதுவும் இன்னமும் சாத்தியமாக்கப்படவில்லை.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், “உங்கள் காணிகளுக்கான சட்ட ரீதியான ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் , அந்த காணிகளை பெற்று தருவோம். உங்கள் காணிகளை பலவந்தமாக வைத்துக்கொள்ளும் எண்ணம் தேசிய மக்கள் சக்தியினருக்கு இல்லை.தேசிய பாதுகாப்புக்கு அத்தியாவசியம் அற்றது எனக் கருதப்படும் இடங்களை விடுவிக்குமாறு எமது அரசாங்கம் உரிய தரப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளது ” என காணி உரிமையாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் திருக்கோணேஸ்வரர் ஆலய பகுதியில் இலங்கை விமானப்படையினால் ரேடார் அமைக்க இடம் கோரப்பட்டுள்ளது.
திருக்கோணேஸ்வர ஆலய வாசலில் முதலாவதாக கேணி இருந்த இடத்தை மூடி இலங்கை இராணுவமும் அதனைத் தொடர்ந்து மத்தியில் காவல்துறை தலைமையகமும் அதனைத் தொடர்ந்து நந்தி மலையில் கடற்படைத் தளமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.